உத்திரமேரூர், காஞ்சிபுரம், திருப்போரூரில் ₹11.38 லட்சம், பட்டு சேலைகள் 9.5 சவரன் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை அதிரடி

காஞ்சிபுரம், மார்ச் 17: காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில், ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம், பட்டு புடவைகள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு சந்திப்பில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த வேளாண் துறை அதிகாரி கீதப்பிரியா தலைமையில், அருள், பாரதிராஜா, வெங்கடேசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் அசனமாபேட்டை பகுதியில் இருந்து காஞ்சிபுரம் பட்டுசேலை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக காஞ்சிபுரம் நோக்கி வந்த 2 கார்களை சோதனை செய்தனர். அதில், ஆவணங்கள் இல்லாமல் ₹4 லட்சத்து 42 ஆயிரத்து 800 மதிப்புள்ள 41 பட்டு சேலைகள் மற்றும் ₹1.4 லட்சம் மதிப்புள்ள 14 பட்டு சேலைகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். திருப்போரூர்: திருப்போரூர் தொகுதியில், நேற்று மாலை 3.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி சந்திப்பில் வட்டாட்சியர் வெங்கட்ரமணன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி பைக்கில் வந்த 2 பேரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம், ₹78.5 ஆயிரம் இருந்தது. ஆனால், அவர்களிடம் எவ்வித ஆவணமும் இல்லை.

விசாரணையில், பாஸ்கரன் மற்றும் விஸ்வநாதன் என்றும், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் என்றும், மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன் தொகையை வசூல் செய்து வருவதாக கூறினர். அவர்களிடம், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உத்திரமேரூர்: உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 3 தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கூட்ரோடில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்தவாசியில் இருந்து பெருநகர் நோக்கி சென்று கொண்டிருந்த காரை மறித்து சோதனையிட்டனர். அதில், வந்தவாசியை சேர்ந்த  அரப்அலி (46), முறையான ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ₹10 லட்சத்து 40 ஆயிரம், 9.5 சவரன் சவரன் நகை இருந்தது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள், அதனை பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: