பெங்களூரு: கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவில் மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதுதொடர்பாக திலீப் குமார் என்பவர் 48வது பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம், 2 முறை அழைத்தபோதும் பிரகாஷ் ராஜ் ஆஜராகாததால், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பிரகாஷ் ராஜ் நேற்று தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டார். நீதிமன்ற சம்மனின் நகல் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும், ஊடகங்கள் மூலமாகத்தான் இது தெரியவந்ததாகவும், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பிரகாஷ் ராஜ் பெயர் நீக்கப்பட்டதாகவும் பிரகாஷ் ராஜ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், பிரகாஷ் ராஜுக்கு ரூ.4,000 ரொக்கப் பிணை வழங்குமாறு உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது.
