புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை அமர்வு நேற்று வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. அப்போது உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ நகருக்குட்பட்ட விகாஸ் நகர் போலீஸ் அதிகாரி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்த விவகாரத்தில் அதனை எதிர்த்து பிரபல் பிரதாப் என்பவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அரோக் அராதே ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்குக்காக நேரில் நேரில் ஆஜராகி இருந்த வாதாடிய மனுதாரர் பிரபல் பிரதாப்,\\” அவரது லக்னோவின் விகாஸ் நகர் காவல்துறை உதவி ஆணையர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று நான் உங்களுக்கு ஆணையிடுகிறேன் என்று ஆவேசமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மனுதாரரின் நடவடிக்கையால் திகைத்துப் போன நீதிபதி கே.வி.விஸ்வநாதன், மனுதாரரை நோக்கி நீங்கள் எங்களுக்கு உத்தரவிடுகிறீர்களா?. காவல்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய நீங்கள் எனக்கு உத்தரவிடுகிறீர்களா என்று கடுமையான கோபத்துடன் கேட்டார்.
இதைத்தொடர்ந்து அதற்கு ஆவேசமாக பதிலளித்த மனுதாரர் பிரபல் பிரதாப், தனது கையில் இருந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்ற அறையில் ஆக்கிரோஷமாக வீசி எறிந்தது மட்டுமில்லாமல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் நீதிமன்ற அறையில் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற பாதுகாவலர்கள் விரைந்து செயல்பட்டு பிரபல் பிரதாப்பை வலுக்கட்டாயமாக நீதிமன்ற அறையில் இருந்து அப்புறப்படுத்தினர். அவரிடம் உச்ச நீதிமன்ற காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்குக்காக ஆஜராகி இருந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணியை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
