திருவனந்தபுரம்: இந்த ஆண்டு முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயகுமார் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு சீசனில் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதன்பின் தேவசம் போர்டு தலைவர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறியது: இந்த ஆண்டு முதல் சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சபரிமலையில் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 690 தங்கும் அறைகள் உள்ளன. இதுவரை இதில் 190 அறைகள் மட்டுமே ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு முன்பதிவு செய்ய முடிந்தது. வரும் மண்டல சீசன் முதல் 550 அறைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். அறைக்கு டெபாசிட் பணம் எதுவும் தேவையில்லை. அறைக்கான வாடகையை முன்கூட்டியே செலுத்தி அதனுடன் ரூ. 50 சேவைக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.
நவம்பர் 1ம் தேதி முதல் 90 நாட்களுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் உள்பட அதிநவீன வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்படும். நெரிசலை கட்டுப்படுவதற்காக செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய ஒரு கட்டுப்பாட்டு அறை சன்னிதானத்தில் திறக்கப்படும். 2048ம் ஆண்டு வரை படிபூஜைக்கான முன்பதிவு முடிந்து விட்டதால் தந்திரியின் அனுமதியுடன் தினமும் 5 படிபூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலையில் மரணமடைந்த 54 பக்தர்களின் உறவினர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படும். தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும்போது பக்தர்கள் 5 ரூபாய் செலுத்துகின்றனர். இதிலிருந்து தான் மரணமடையும் பக்தர்களுக்கான இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படுகிறது. அன்னதானத்திற்காக எந்த தனியாரிடமிருந்தும் நன்கொடை பெறப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.
