புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் குளறுபடி உள்ளிட்ட பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் மாணவர் சந்திப்பு நடத்தப்போவதாக அறிவித்து இருந்தார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் முதல் சந்திப்பு நடந்தது. இந்த நிலையில் ராகுல்காந்தியின் அடுத்தடுத்த மாணவர் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் துஹின் சின்ஹா கூறியதாவது:
ஜூன் 19-ஆம் தேதிக்குப் பிறகு ராகுல் காந்தி பொதுவெளியில் தோன்றியதற்கான எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இல்லை. அதன்பிறகு அவர் எந்தப் பேரணிகளிலோ, செய்தியாளர் சந்திப்புகளிலோ அல்லது பிற பொது நிகழ்ச்சிகளிலோ பங்கேற்கவில்லை. அவர் எங்கே இருக்கிறார்?. ராகுல் காந்தி முழுமையாக விடுமுறையைக் கழிப்பதில் மூழ்கியுள்ளார். தனது அரசியலுக்காக மாணவர்களைப் பயன்படுத்திக்கொண்ட ராகுல் காந்தி நீண்ட விடுப்பில் சென்றுள்ளார். இதனால் மூன்று மாணவர் பேரணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விடுமுறையைக் கொண்டாடும் ஆர்வத்திலிருந்து ராகுல் காந்தியால் விடுபட முடியாமல் இருப்பது எவ்வளவு அவமானகரமானது. இது அவரை மீண்டும் ஒரு பொறுப்பற்ற அரசியல்வாதியாகக் காட்டுவதுடன், தனது சுயநல அரசியலுக்காக மாணவர்களின் உணர்வுகளை அவர் வெறும் கருவியாகப் பயன்படுத்தினார் என்பதையும் நிரூபிக்கிறது. இத்தகைய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளிடம் மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
