ராயக்கோட்டை, ஜூலை 9: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பூக்கள் சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு நிலவும் இதமான சீதோஷ்ணம் காரணமாக பல்வேறு வகை பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பூக்கள் தரமாகவும், வாசனையாகவும் இருப்பதால், மார்க்கெட்டுகளில் நன்கு விற்பனையாகிறது. இப்பகுதிகளில் விளையும் பூக்களை பறித்து, ராயக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த மார்க்கெட்டிற்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து, பூக்களை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். அடுத்து வரும் ஆடி மாதத்தில் பல்வேறு பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறும் என்பதால், சாமந்தி பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
