விளைநிலங்களில் கொட்டப்படும் கர்நாடக மாநில குப்பை கழிவுகள்

 

தேன்கனிக்கோட்டை, ஜூலை 2: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள விளைநிலங்களில் கர்நாடக மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் குப்பை கழிவுகளை வீசி விட்டு செல்வதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அரசகுப்பம் ஊராட்சி பெனசப்பள்ளி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். பருவமழை பொய்த்ததால், தரிசாக கிடக்கும் விளைநிலங்களுக்கு, இயற்கை உரங்களான ஆடு மற்றும் மாட்டு சாணம் மட்டுமின்றி வண்டல் மண் கொண்டு வந்து கொட்டி ஊட்டமேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனை பயன்படுத்தி, கர்நாடக மாநிலத்தில் இருந்து தொழிற்சாலை குப்பை கழிவுகளை மினி லாரி மூலம் பெனசப்பள்ளி பகுதிக்கு கொண்டு வந்து, இங்குள்ள விவசாய நிலங்களில் இரவோடு இரவாக கொட்டிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், தற்போது பட்டப்பகலிலேயே குப்பை கழிவுகளை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து விளை நிலங்களில் கொட்டி விட்டுச் செல்வது அதிகரித்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், `எங்களுக்கு விவசாயத்தை தவிர வேறு தொழில் எதுவும் தெரியாது. மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். கிணறு மற்றும் குட்டைகளில் சேகரமாகும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தி கொள்கிறோம். மழை பொய்த்துள்ளதால், நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது.

இதனால், விளை நிலங்களில் மக்கும் உரங்கள் மற்றும் இலை தழைகளை வெட்டி போட்டு ஊட்டமேற்றி வருகிறோம். இந்நிலையில், கர்நாடகாவிலிருந்து தொழிற்சாலை குப்பை கழிவுகளை கொண்டு வந்து விளை நிலங்களிலும், வறண்டு கிடக்கும் நீர் நிலைகளிலும் வீசிச் செல்கின்றனர். தற்போது பட்டப்பகலிலேயே இது அரங்கேறி வருகிறது. நாள்பட்ட குப்பை கழிவுகளை மூட்டை, மூட்டையாக கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ஆடு -மாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு அபாயம் உருவாகியுள்ளது,’ என்றனர். இந்நிலையில், குப்பை கழிவுகளை எடுத்து வரும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் கொடுத்துள்ளனர். இதன்பேரில், போலீசார் லாரியின் பதிவு எண்களை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: