நாள்தோறும் 600 பஸ்கள் வந்து செல்லும்: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதியின்றி பயணிகள் அவதி

 

கிருஷ்ணகிரி, ஜூலை 2: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில், முன்பதிவு மையம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்திலிருந்து, கடந்த 2004ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் உதயமானது. கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில், 18 ஆண்டுக்கு முன்பு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. இங்கிருந்து ஓசூர், பெங்களூரு, தர்மபுரி, வேலூர், சேலம் உள்பட பல நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல், தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து ஓசூர், பெங்களூரு செல்லும் அரசு பஸ்களும் கிருஷ்ணகிரி பஸ் நிலையம் வந்து செல்கின்றன. இதைத் தவிர ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர், திருப்பதி போன்ற நகரங்களுக்கு கிருஷ்ணகிரியிலிருந்து ஆந்திர மாநில பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், கர்நாடக மாநில அரசு பஸ்களும் கிருஷ்ணகிரி பஸ் நிலையம் வந்து செல்கின்றன. நாள்தோறும் 600க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லக்கூடிய கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அரசு விரைவு பஸ்களுக்கு இங்கு முன்பதிவு மையம் இல்லை.

பெங்களூருவில் இருந்து வரக்கூடிய அரசு விரைவு பஸ்கள் பெங்களூரு, ஓசூரில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வருவதால், கிருஷ்ணகிரி பயணிகளுக்கு விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் இடம் கிடைப்பதில்லை. அதேபோல, ஆன்லைன் மூலமாக ஓசூரில் இருந்து முன்பதிவு செய்து கிருஷ்ணகிரியில் ஏறக்கூடிய நிலை உள்ளது. இதனால், குறைந்த கட்டணத்தில் பயணிகள் செல்ல முடியாமல், அதிக கட்டணம் செலுத்தி தனியார் ஆம்னி பஸ்களில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல ஏதுவாக, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் முன்பதிவு மையம் அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், இந்த பஸ் ஸ்டாண்டில் திறந்த வெளியில் உள்ள சுகாதார வளாகத்தில், கடுமையான துர்நாற்றம் வீசுவதால் ஓசூர், பெங்களூரு பஸ்கள் நிற்கும் பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. பஸ் ஸ்டாண்ட் முழுவதும் பல இடங்களில் காரை பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எனவே, கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டை மேம்படுத்தி வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `மாவட்ட தலைநகரமான கிருஷ்ணகிரியில், ரயில் போக்குவரத்து வசதி இல்லை. அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு மையம் இல்லை.

பெங்களூருவில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், வேளாங்கண்ணி, செங்கோட்டை உள்பட பல ஊர்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள், கிருஷ்ணகிரி பஸ் நிலையம் வந்தாலும், பல நாட்களில் பயணிகளுக்கு சீட் கிடைப்பதில்லை. இதனால், கிருஷ்ணகிரியில் வசிக்கும் வெளியூர் மக்கள், தனியார் ஆம்னி பஸ்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட தலைநகரில் உள்ள கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: