திண்டிவனம், ஜூலை 8: திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற கார் மீது பின்னால் வந்த சொகுசு காரின் டயர் வெடித்ததால் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் பாலமுருகன் (42) மற்றும் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த விஜய், அவரது நண்பர் ஆகிய 3 பேரும் விருத்தாசலத்தில் இருந்து சொந்த வேலை காரணமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திண்டிவனம்-சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சாரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் இவர்கள் சென்ற கார் மீது மோதியது.
இதில் பாலமுருகன் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள புளியமரத்தின் மீது மோதியது. இதில் பாலமுருகன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட காரில் வந்த நபர் ஒருவர் மற்றும் மோதிய காரில் வந்த சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா மகன் முகமது ஆசிப் (23) மற்றும் ராமநாதபுரம் எஸ்.பி. பட்டினம் பகுதியை சேர்ந்த ஆசாத் அலி (70) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஒலக்கூர் போலீசார், படுகாயமடைந்த மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பின்னால் சென்ற சொகுசு காரின் பின்பக்க டயர் வெடித்ததால் முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
