கலெக்டர் ஆபீஸ் ரெய்டில் ரூ.78,000 சிக்கியது; நில அளவை துறை உதவி இயக்குநர் உள்பட 5 பேர் மீது வழக்கு: பதவி உயர்வுக்கு பணம் வசூலித்தது அம்பலம்

 

* துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை

விழுப்புரம், ஜூலை 1: விழுப்புரம் கலெக்டர் ஆபீஸ் ரெய்டில் ரூ.78,000 சிக்கிய நிலையில் நில அளவைத்துறை உதவி இயக்குநர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 2வது தளத்தில் செயல்படும் நிலஅளவை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சர்வேயர் மற்றும் கீழ்நிலை ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க லஞ்சப் பணம் வசூலிப்பதாக வந்த புகாரின்பேரில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் 6 மணி நேரத்திற்கு மேலாக நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.78,000 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த உதவி இயக்குநர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பதவி உயர்வுக்காக 5 பேரிடம் இந்த லஞ்சப் பணத்தை வசூலித்தது தெரியவந்தது.

நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு சோதனை நிறைவடைந்த நிலையில் கணக்கில் வராத ரொக்கப் பணத்தை கைப்பற்றி சென்றனர். தொடர்ந்து உயர் அதிகாரிகள் உத்தரவுபடி நில அளவைத்துறை உதவி இயக்குநர் ஜெய்சங்கர், கண்காணிப்பாளர் ஆனந்தகுமார், திருவெண்ணெய்நல்லூர் வட்ட துணை ஆய்வாளர் துரைராஜ், விழுப்புரம் கோட்ட ஆய்வாளர் இளையராஜா, விழுப்புரம் வட்ட நில அளவையர் சக்திவேல் ஆகிய 5 பேர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்ததை தொடர்ந்து இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: