டிராக்டர் மீது மினி லாரி மோதல்: மரக்கட்டைகள் சரிந்து 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

 

பண்ருட்டி, ஜூலை 6: பண்ருட்டி அருகே நடந்த சாலை விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா ஆயிபேட்டை மற்றும் வெங்கடாம்பேட்டை பகுதிகளை சேர்ந்த 12 தொழிலாளர்கள் மினி லாரியில் கூலி வேலைக்காக நேற்று அதிகாலை பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் பணிக்கன்குப்பம் அருகே முன்னால் மரக்கட்டை ஏற்றி சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றபோது மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் டிராக்டரில் இருந்த மரக்கட்டைகள் சரிந்து மினி லாரியில் பயணம் செய்த கூலி தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் வாகனம் நொறுங்கி சேதமடைந்தது. மரக்கட்டைகள் சரிந்து டிராக்டர் டிப்பர் கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பண்ருட்டி டிஎஸ்பி ரகுபதி, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிபேட்டை ரவிச்சந்திரன்(60), ராணி(59) ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேல் சிகிச்சைக்காக 10 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிபேட்டை காந்திமதி(60), வெங்கடாம்பேட்டை சத்யா(32) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Stories: