புதுச்சேரி, ஜூலை 2: புதுவையில் 6 பேரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மடுகரையை சேர்ந்த ஆண் நபரின் வாட்ஸ் அப்பில், அவரது நண்பனின் புகைப்படம் வைத்து அவசரமாக பணம் தேவை என்று குறுந்தகவல் வந்துள்ளது. இதையடுத்து மேற்கூறிய நபர் அவரது நண்பனுக்கு ரூ.30 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். தொடர்ந்து, அவரது நண்பனை தொடர்புகொண்டு பணம் வந்ததா என மேற்கூறிய நபர் விசாரித்தபோது, அவர் பணம் கேட்கவில்லை எனவும், நண்பனின் புகைப்படத்தை வைத்து மோசடிக்காரர்கள் பணம் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது.
புதுவையைச் சேர்ந்த ஆண் நபரை, மர்ம நபர் தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலம் துணிகளை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய நபரும் பேசியுள்ளார். பின்னர், இதற்கு செயலாக்க கட்டணம் செலுத்துமாறு கூறியதை நம்பி, மேற்கூறிய நபர் ரூ.19 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்துள்ளார்.
புதுவை செம்பியம்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.4 ஆயிரம், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஆண் நபர் ரூ.6,500, முத்தியால்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ரூ.5,400, தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்த ஆண் நபர் ரூ.7 ஆயிரம் என மோசடிக்காரர்களிடம் ஏமாந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
