புதுச்சேரி, ஜூலை 3: புதுச்சேரி சுத்துக்கேணி பகுதியை சேர்ந்த ஆண் நபரை அறிமுகம் இல்லாத நபர் தொடர்பு கொண்டு, லோன் அதிகாரி எனக் கூறி, முத்ரா திட்டத்தில் ரூ.1 லட்சம் குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், அதற்கு செயல்முறை கட்டணமாக ரூ.42,300 தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த ஆண் நபர், மேற்கண்ட தொகையை அனுப்பியுள்ளார். ஆனால் கடன் கிடைக்கவில்லை, செலுத்திய பணத்தையும் திரும்பப்பெற முடியவில்லை, அந்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். அதேபோல், உறுவையார் பகுதியை சேர்ந்த ஆண் நபரிடம், வங்கி அதிகாரி போல் பேசி, ஓடிபி கேட்டுப் பெற்று ரூ.7 ஆயிரத்தை பறித்துள்ளனர். முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபருக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் லிங்க் வந்துள்ளது.
அதை கிளிக் செய்து திறந்ததும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.51 லட்சத்தை எடுத்து விட்டனர். அதேபோன்று, அரியாங்குப்பத்தை சேர்ந்த ஆண் நபரை அறிமுகம் இல்லாத நபர் தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே பகுதிநேர வேலை மூலமாக டாஸ்க் முடிப்பதன் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அவர், ரூ.10.56 லட்சமும், அதனை தொடர்ந்து ரூ.4 லட்சமும் அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கான வருவாய் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதேபோல், புதுச்சேரி பகுதியை சேர்ந்த பெண், வாட்ஸ்அப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆன்லைனில் ரூ.31,470க்கு ஆடைகள் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆடைகளை அனுப்பாமல் மோசடி செய்துவிட்டனர். மூலகுளத்தை சேர்ந்த பெண் பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து ரூ.4,497க்கு ஆடைகள் ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார்.மேற்கண்ட பாதிக்கப்பட்ட 2 பெண்கள் உள்பட 6 பேரும், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் போர்ட்டல் மூலமாக புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
