இன்ஸ்டா காதலியை அபகரித்ததாக நினைத்து போட்டோகிராபரை கொன்று உடல் தண்டவாளத்தில் வீச்சு: கரூர் வாலிபர்கள் இருவர் கோவை நீதிமன்றத்தில் சரண்

கோவை: இன்ஸ்டாகிராம் காதலியை அபகரித்ததாக நினைத்து போட்டோகிராபரை கொன்று உடலை தண்டவாளத்தில் வீசிய கரூர் வாலிபர்கள் இருவர் கோவை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். கோவை, தடாகம் அடுத்த மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (24). போட்டோகிராபர். இவர், கடந்த 2ம் தேதி வீட்டில் புதிய போட்டோ ஆர்டர் வந்து இருப்பதாகக் கூறி ஒட்டன்சத்திரம் புறப்பட்டு சென்றார். அதன்பின், அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வாலிபர் மாயம் என வழக்குப்பதிந்து தேடி வந்தனர்.

இதற்கிடையே, கிணத்துக்கடவு அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார். போத்தனூர் ரயில்வே போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், அவர் மாயமான போட்டோகிராபர் பிரவீன் என்பது உறுதியானது. தண்டவாளத்தில் தலை வைத்து அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என கருதப்பட்டது.

இவ்வழக்கில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, நேற்று கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் கரூரைச் சேர்ந்த மனோஜ்குமார் (26) மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் (27) ஆகியோர் ஆஜராகி, “நாங்கள் தான் பிரவீனை திட்டமிட்டுக் கொலை செய்து தண்டவாளத்தில் வீசினோம்” எனக் கூறி சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ​கரூரைச் சேர்ந்த மனோஜ்குமாரும், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 4 வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளனர்.

அந்த பெண் மடத்தூரைச் சேர்ந்த போட்டோகிராபர் பிரவீனுடனும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இது கடந்த பிப்ரவரி மாதம் மனோஜ்குமாருக்கு தெரியவே, காதலுக்கு பிரவீன் இடையூறாக இருப்பதாகக் கருதி அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார். பிரவீனின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.,யைக் கண்டறிந்து கடந்த 2ம் தேதி அவரை தொடர்பு கொண்டு, ஒட்டன்சத்திரத்தில் ஒரு போட்டோ ஷூட் இருக்கிறது, உடனே வாருங்கள் என ஏமாற்றி வரவழைத்து உள்ளார். அதை நம்பி வந்த பிரவீனிடம், இரவு நேரமாகிவிட்டது, நாளை காலை போட்டோ ஷூட் வைத்துக் கொள்ளலாம்.

இன்று இரவு என் வீட்டிலேயே தங்குங்கள் எனக் கூறி அழைத்து சென்று மனோஜ்குமாரும், அவரது நண்பர் கார்த்திகேயனும் பிரவீனை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளனர். போதையானதும், வீட்டிற்குச் செல்லலாம் எனக் கூறி காரின் முன் இருக்கையில் அமர வைத்தனர். நள்ளிரவில் காரை சாலையோரம் நிறுத்தி இருவரும் கயிற்றால் பிரவீன் கழுத்தை இறுக்கினர். இதில், அவர் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்ததுபோல் காட்ட திட்டமிட்டு, கிணத்துக்கடவு பகுதியில் போத்தனூர் ரயில்வே எல்லைக்கு உட்பட்ட தண்டவாளத்தில் வீசி உள்ளனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ரயில் பிரவீன் மீது ஏறியதில், தலை துண்டானது. இதைதொடர்ந்து தடாகம் போலீசாரும், போத்தனூர் ரயில்வே போலீசாரும் தங்களை நெருங்குவதை உணர்ந்த கொலையாளிகள் இருவரும் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். காதலி வேறொருவருடன் பழகியதால், வாலிபரை காரில் வைத்து கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசிய சம்பவம் கோவையில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: