அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 35 சவரன், பணம் கொள்ளை

 

புழல்: சென்னை சோழவரம் அடுத்த ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயபிரகாஷ் (55). இவர் சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகின்றார். இவரது மகள் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கின்றார். இந்தநிலையில் வீட்டை பூட்டிவிட்டு மகளை பார்ப்பதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோவைக்கு சென்றுள்ளனர். இதன்பின்னர் அங்கிருந்து இன்று காலை சென்னைக்கு வந்தனர். அப்போது தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதன்பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு செயின், மோதிரம் உள்பட 35 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளைப்போனது தெரிந்ததும் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சோழவரம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ‘’மகளின் திருமணத்துக்காக கடந்த 20 ஆண்டுகளாக சேகரித்து வைத்திருந்த நகைகள் திருட்டுப்போய்விட்டது’ என்று தெரிவித்தனர்.

ஆத்தூர் கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சோழவரம் காவல்நிலையத்தின் சார்பில், காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. தற்போது காவல் உதவி மையம் செயல்படாமல் புதர் மண்டி காணப்படுகிறது. கஞ்சா ஆசாமிகளின் புகலிடமாக அது மாறிவிட்டது. காவல்துறையினர் ரோந்து பணிகளை மேற்கொள்வதில்லை. தங்களது கிராமத்தில் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெற்றது கிடையாது.

காவல்துறையினரின் அலட்சியம் காரணமாக தற்போது கொள்ளை நடந்துள்ளது. கிராமம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் முறையாக செயல்படுகிறதா என்று காவல்துறையினர் ஆய்வு செய்யவேண்டும். இரவு ரோந்து பணிகளை மேற்கொண்டு குற்றச் சம்பவங்களை தடுத்திடவேண்டும்’’ என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: