வேளாண் கடன் முழுமையாக தள்ளுபடி கோரி சென்னையில் வரும் 30ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன் தகவல்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் நேற்று அளித்த பேட்டி: கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமார் சட்டவிரோதமாக மேகதாது அணை கட்ட முயற்சிக்கிறார். தமிழக அரசு மேகதாதுவுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டதாக கூறி அனுமதி கேட்பது நீதிமன்ற அவமதிப்பாகும். இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடவடிக்கையை பின்பற்றி மத்திய நீர் வள ஆணையமும் வரைவு திட்ட அறிக்கையை கர்நாடகாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகளோ நீர்த்தேக்கங்களையோ கர்நாடகா கட்டக்கூடாது என காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. தமிழக காவிரி டெல்டாவில் நடப்பாண்டு (2026) குறுவைக்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் மிகப்பெரிய இழப்பை டெல்டா விவசாயிகள் சந்தித்திருக்கிறோம். எதிர்காலத்தில் சம்பாவிற்கும் தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா ? என்கிற சந்தேகத்தில் உள்ளோம்.

தவெக தேர்தல் அறிக்கையில் கூறியபடி சிறுகுறு விவசாயிகளுக்கு 100%ம் பெரு விவசாயிகளுக்கு 50% நிலத்தின் அடிப்படையில், வேளாண் கடன் முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 விலை நிர்ணயம் செய்து செப்டம்பர் 1 முதல் கொள்முதல் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: