திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து மாற்றம் புதிய பாலத்தில் 30 கிராம மக்கள் மறியல்: 4 மணிநேரம் வாகனங்கள் முடக்கம்; போலீஸ் தடியடி: 50க்கு மேற்பட்டோர் கைது

திருச்சி: திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால், புதிய பாலத்தில் 30 கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குரத்து முடங்கியது. சென்னையில் இருந்து திருச்சி வழியாக சேலம், நாமக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையை பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சஞ்சீவி நகர்-திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய காவிரி பாலத்தில் ரூ.10 கோடி மதிப்பில் விரிவான பராமரிப்பு பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது. மூன்று மாதங்கள் நடைபெற உள்ள இந்தப் பணிகளுக்காக பழைய பாலம் முழுமையாக மூடப்பட்டு, அருகில் அமைந்துள்ள புதிய காவிரி பாலத்தில் இருவழிப் போக்குவரத்து அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காலை மற்றும் மாலை ‘பீக் அவர்ஸ்’ல் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக சில நிமிடங்களில் கடந்து செல்லும் தூரத்தை கடக்க தற்போது 40 நிமிடங்கள் வரை ஆகிறது.
புதிய பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து கல்லணை சாலை பிரிகிறது. இந்த சாலையை பயன்படுத்தி திருக்காட்டுப்பள்ளி வரை உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் திருச்சி மாநகருக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் கல்லணை சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, அங்கிருந்து சஞ்சீவி நகர் வழியாக ஓயாமரி சுடுகாடு, ஸ்ரீரங்கம், சத்திரம் பஸ் நிலையம் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு எளிதாக சென்று வந்தனர்.

சப்வே அமைக்காத நிலையில் பழைய காவிரி பாலத்தை திடீரென மூடி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லணை சாலை வழியாக வரும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று காலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர்-கல்லணை சாலை சந்திப்பு அருகே அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தை தொடங்கினர்.

இதனால் 10 கி.மீக்கு மேலாக கனரக லாரிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், சுற்றுலா வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், கார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் அசைய முடியாமல் சிக்கின. சென்னையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும் பல மணி நேரம் நெரிசலில் சிக்கித் தவித்தன. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் அருண் பிரசாத் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

டிஆர்ஓ பாலாஜியும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலை முடங்கியதால் வாகனங்களில் இருந்த பயணிகள், முதியவர்கள், குழந்தைகள் கடும் அவதியடைந்தனர். வெயிலின் தாக்கத்தால் பலர் வாகனங்களில் இருந்து இறங்கி மர நிழலில் நின்றனர். குடிநீர் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணம் செய்த பெண்களும் சிரமப்பட்டனர்.

போக்குவரத்து நெரிசல் உச்சத்தை எட்டிய நிலையில், சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். முதலில் சாலையில் அமர்ந்திருந்த பெண்கள், மாணவ-மாணவியரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் சாலையை மறித்து அமர்ந்திருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை அதிரடிப்படை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேன்களில் ஏற்றத் தொடங்கினர்.

அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூழ்நிலையை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். தொடர்ந்து 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதையடுத்து காலை 11.30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.

Related Stories: