கம்பம்: கர்நாடகாவை சேர்ந்தவரை டெல்லி பிரதிநிதியாக நியமிப்பது தமிழ்நாட்டுக்கு பயன் அளிக்காது என கம்பம் செல்வேந்திரன் தெரிவித்தார். தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழ்நாடு அரசின் முன்னாள் டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வந்திரன் அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவை, முதல்வர் விஜய் நியமித்த செய்தி அதிர்ச்சி அளித்தது. தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து, தேவைகளைப் பெற்று மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டிய பெரிய பொறுப்பு டெல்லி பிரதிநிதிக்கு உள்ளது.
அப்படிப்பட்ட பதவியில் தமிழகத்தை சேர்ந்தவரை நியமிக்காமல், கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனம் தமிழ்நாட்டுக்குப் பயனளிக்காது. ஏனென்றால், தமிழன் என்ற உணர்வு இருக்கிறவர்களால்தான் தமிழ்நாட்டுக்குப் பயனளிக்கும் திட்டங்களுக்காகப் போராட முடியும், வாதாட முடியும். கலைஞர் முதல்வராக இருந்த 2006-2011 வரை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நான் இருந்தேன்.
எம்பியாக 5 ஆண்டு இருந்த காரணத்தால், டெல்லியில் உள்ள அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் எனக்கு அறிமுகம் இருந்தது. அவர்களை எப்படி அணுகுவது என்பதும் தெரிந்திருந்தது. அதனால் பணியாற்றுவது எளிதாக இருந்தது. எதுவுமே தெரியாத ஒருவரைத் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்று நியமித்தால், அவரால் திக்குத் தெரியாத காட்டைப் போல அலைந்து திரிய முடியுமே தவிர, முறையாக அணுக முடியாது.
ஒருவேளை விஜய்க்கு டெல்லியில் ஏதாவது படப்பிடிப்பு இருக்கிறதோ தெரியவில்லை. தனக்கு ஒரு படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு, சம்பளத்தைக் குறைத்து வாங்கி உதவலாம் அல்லது வேறு ஏதாவது முதல்வர் என்ற முறையில் செய்து கொடுக்கலாம்.அப்படி அன்பை காட்டலாமே தவிர, உயர் பதவிகளில் நியமிப்பது நல்ல முன்னுதாரணமாக இருக்காது.இவ்வாறு கூறினார்.
* கர்நாடகாவை சேர்ந்தவராக இருப்பதால் கர்நாடகாவிற்கு சப்போர்ட் செய்வார் என சொல்லிட முடியாது: காங்கிரஸ் எம்பி சப்பைக்கட்டு கரூரில் எம்பி ஜோதிமணி நேற்று அளித்த பேட்டி: டெல்லியில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக இருப்பவர்களுக்கு சென்சிட்டிவான பணிகள் இருக்கும். தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் போன்றவற்றில் அவர்களுக்கு தெளிவான புரிதல் இருந்தால் நல்லது. தமிழ்நாட்டின் பிரதிநிதியாக இருக்க கூடிய ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
கர்நாடகத்திற்கும், நமக்கும் மேகதாது பிரச்னை இருந்து வரும் ஒரு சூழலில் இது ஒரு சிக்கலான விசயமாக தனிப்பட்ட முறையில் தெரிகிறது. அவர் கர்நாடகாவை சேர்ந்தவராக இருப்பதால் கர்நாடகாவிற்கு சப்போர்ட் செய்வார் என சொல்லிட முடியாது. இதுபோன்ற ஒரு சென்சிட்டிவான பிரச்னையில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு முதல்வர் வெளிப்படையான ஒரு நிர்வாகத்தை நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
