திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பெரியகரம் கிராமத்தை சேர்ந்தவர் மேனகா(45). இவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 23ம் தேதி மாலை பணி முடிந்து போளூருக்கு அரசு பஸ்சில் மேனகா சென்றுகொண்டிருந்தார். கலசபாக்கம் அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மேனகா படுகாயம் அடைந்தார். பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேனகா, நேற்று காலை உயிரிழந்தார். முறையாக சிகிச்சை அளிக்காததாலும், உயர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்க மறுத்து தாமதித்ததாலும் மேனகா உயிரிழந்தார் என குற்றம் சாட்டி, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சடலத்தை வாங்க மறுத்து தர்ணா செய்தனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, சக தூய்மைப்பணியாளர்களும் பங்கேற்றனர். அதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தூய்மைப் பணியும் பாதிக்கப்பட்டது.
காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம், பிற்பகல் 3 மணிவரை நீடித்தது. மேனகாவின் கணவருக்கு பார்வை குறைபாடு இருப்பதாகவும், 3 குழந்தைகளை பராமரிக்க இயலாத நிலை ஏற்பட்டிருப்பதால் அரசு சார்பில் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தர வேண்டும், ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். டீன் ஜெயலால் மற்றும் போலீசார் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் அளித்த உறுதியை ஏற்று, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
