மாணவர்களுக்கு சாதியுடன் அடையாள அட்டை கடும் எதிர்ப்பு கிளம்பியதால் செங்கோட்டையன் பல்டி

கோபி: தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் 25ம் தேதி அளித்த பேட்டியில் மாணவர்களுக்கு சாதி உள்ளிட்ட விவரங்களுடன் அடையாள அட்டை வழங்கப்படும் என்று பேட்டியளித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று அளித்த பேட்டியில் அதை மறுத்து கூறியதாவது: வருவாய் துறை, கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்களுக்கு டேட்டா எனப்படும் முகவரி, ரத்த வகை, ஆதார் எண், கல்வித்தகுதி போன்றவை வழங்கலாமா என பரிசீலித்து கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக வருவாய் துறையின் மூலம் 10, 12 படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் சாதி சான்றிதழ் பெற்று வழங்கப்படுவது 5 ஆண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் சென்றுதான் சான்றிதழை பெற முடியும். தற்போது பள்ளிகளிலேயே சான்றிதழ்களை வழங்கும் பணியை வருவாய்த்துறை செய்து வருகிறது. அதே நேரத்தில் வழங்கப்படும் டேட்டா சாதி அடிப்படையில் இருக்காது.

பள்ளியில் சாதி இடம்பெறக்கூடாது என்பது தான் அரசின் நோக்கம். சாதி சான்றிதழை இணைப்பதாக வரும் தகவல் தவறானது. எப்போதும் இணைக்க மாட்டோம். டேட்டாவுடன், சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்றுதான் சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார். கர்நாடகாவை சேர்ந்த ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக நியமித்தது குறித்து கேட்டதற்கு அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக அரசுக்கான டெல்லி பிரதிநியை நியமிப்பது அரசின் கொள்கை முடிவு.

அதில் இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதில் தவறு ஏதும் இல்லை. நூற்றுக்கு நூறு சதவீதம் முதல்வரால் நியமிக்கப்பட்ட அனைவரும் தமிழ்நாட்டிற்காக குரல் கொடுப்பார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து திட்டங்களையும் ஒன்றிய அரசு கொண்டு வர உள்ள திட்டங்களாக இருந்தாலும், நதிநீர் பிரச்னைகளாக இருந்தாலும் முழுமையாக அதற்கு வாதிடுவதற்கும், குரல் கொடுப்பதற்கும் நியமிக்கப்பட்ட அனைவரும் தயாராக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.

* பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்களுக்கே மறுபடியும் சீட்டுன்னு சொல்ல முடியாது
‘தவெகவில் விஜயபாஸ்கர் இணைவது குறித்து ஆலோசனை சென்று கொண்டிருக்கிறது. இணைவது எப்போது என விஜயபாஸ்கர் தான் யோசித்து சொல்ல வேண்டும். முடிவு அவர் கையில் தான் இருக்கிறது. அவர் இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார். பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்களுக்கு இடைத்தேர்தலில் மீண்டும் சீட்டு வழங்கப்படுமா என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும். அவர்களுக்கே வழங்குவார்களா? என்பதை இப்போது கூற முடியாது’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Stories: