விழுப்புரம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(59). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற போது அதிவேகமாக வந்த வேன் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக டாக்டர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் ஆறுமுகம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரேத பரிசோதனை நடத்த போதிய டாக்டர்கள் இல்லாததால் அதிக எண்ணிக்கையில் சடலம் வைக்கப்பட்டிருந்ததாம். நேற்று காலை ஆறுமுகத்தின் உறவினர்கள் அவரது உடலை சென்று பார்த்தபோது அவர் தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் எலிகள் கடித்து குதறியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாக அலுவலர் மற்றும் டாக்டர்களிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் சரியாக பராமரிக்கவில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலை எலி கடித்து குதறியுள்ளதால் எப்படி எடுத்துச் சென்று அடக்கம் செய்வது என்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் கூறுகையில் விபத்தில் ஏற்பட்ட காயத்தை எலி கடித்ததாக கூறுகின்றனர். இங்கு அது போல் ஏதும் நடக்கவில்லை என்றனர்.
