சேலம்: சேலம் மரவனேரியில் செயல்பட்டு வரும் பாரதி வித்யாலயா பள்ளியின் முப்பெரும் விழா நேற்று நடந்தது. இதில், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறையில் புதிய திட்டங்கள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். ஆன்லைன் முறையை முழுமையாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்பதிவுக்கான கால இடைவெளியை குறைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அதுகுறித்து விரைவில் அறிவிப்போம். நிதிநிலை அறிக்கையில் இதுதொடர்பாக முழுமையான அறிவிப்புகள் வெளியிடப்படும். சர்வர் பிரச்னை குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வரியினங்களை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் முதலமைச்சரின் ஆலோசனையை பெற்று வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் துறைகளில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை முன்னிலையில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் வருவாய் அதிகரித்துக் கொண்டு உள்ளது. சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்பிற்கும் உள்ள இடைவெளியை சரி செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிடம் அறிக்கை பெற்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
