சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை அதிரடியாக மாற்றப்பட்டு, தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்பியை நியமித்து அகில இந்திய தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றவர்களில் செல்வப்பெருந்தகையும் ஒருவர்.
அதன் பிறகு, 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் என இரண்டு தேர்தல்களைக் காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் சந்தித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே, காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் பல்வேறு அரசியல் நகர்வுகள் விவாதப் பொருளாக மாறி வந்தன.
திமுக கூட்டணியில் இருந்து விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்கும் முடிவை மாநில காங்கிரஸ் எடுத்திருந்தது. இந்த அதிரடி நிலைப்பாட்டில் செல்வப்பெருந்தகைக்கு சில உடன்பாடுகள் இல்லை என்றும், அதனால் அவர் அதிருப்தியில் இருந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கிடையே, வேட்பாளர்கள் தேர்வில் ஊழல் என்று ஜோதிமணி எம்பி கூறிய குற்றச்சாட்டு காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் கட்சி தலைமை வழங்கிய தேர்தல் செலவு பணத்தில் முறைகேடு என்று பல்வேறு புகார்கள் மேலிடத்தை அதிர வைத்தது. இதற்காக கட்சி தலைமை ஒரு குழுவையும் நியமித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாற்றப்படுவார் என்றே கூறப்பட்டது. தலைமைப் பதவியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலகத் தயாராக இருப்பதாக செல்வப்பெருந்தகை கூறினார்.
தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் சூழலும் மாறிவிட்டதால், அவரை மாற்ற கட்சி மேலிடமும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் ரேசில் இருந்த மாணிக்கம் தாகூர் மற்றும் விஜய் வசந்த் எம்பி ஆகியோரில் யாராவது ஒருவரை கட்சி தலைமை நியமிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் இந்த வாரத்துக்குள் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்ற பேச்சும் தமிழக காங்கிரசில் தொடர்ந்து எழுந்து வந்தது.
இதனால் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய தலைவராக மாணிக்கம் தாகூரை கட்சி தலைமை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பி. மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்படுகிறார். உடனடியாக இது அமலுக்கு வருகிறது.
மேலும், முன்னதாக மாநிலத்தின் தலைவராக பணியாற்றிய செல்வப்பெருந்தகையின் பங்களிப்பை கட்சி பெரிதும் மதிக்கிறது’’ என்றும் குறிப்பிட்டுள்ளார். விருதுநகர் தொகுதியில் இருந்து மாணிக்கம் தாகூர் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகி வருகிறார். சிவகங்கை முன்னாள் எம்பி சுதர்சன நாச்சியப்பனின் உறவினர். இதனால் அவர் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். இதனால் சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு பெற்றவராக இருந்தார்.
அவர் மூலம் கட்சியில் மேலிட நிர்வாகிகளிடம் மாணிக்கம் தாகூர் நெருக்கமானார். ஒரு கட்டத்தில் சுதர்சன நாச்சியப்பன் ஓரங்கட்டப்பட்டு, மாணிக்கம் தாகூர் மேலிடத்தில் நெருக்கமானார். இதனால், 2009, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் மிக நம்பிக்கைக்குரியவராக டெல்லி வட்டாரத்தில் பார்க்கப்படுகிறார்.
மாணவர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் காலம் தொட்டே கட்சிக்காக உழைத்து வரும் இவர், நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடா மற்றும் ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் எனப் பல தேசிய அளவிலான பொறுப்புகளைக் கையாண்ட அனுபவம் மிக்கவர். தமிழக அரசியல் களம் மிக வேகமாக மாறி வரும் இந்தச் சூழலில், மாணிக்கம் தாகூரின் புதிய தலைமை தமிழ்நாடு காங்கிரசை அடுத்த கட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்லப் போகிறது என்பதை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
