பஞ்சாப் முதல்வருக்கு எதிரான வீடியோ விவகாரம்; தடயவியல் நிபுணருக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்த டிஐஜி, எஸ்பி மீது போலீசார் வழக்கு: போலி என சான்றிதழ் அளிக்க மிரட்டியது அம்பலம்

 

குருகிராம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தொடர்பான வீடியோவை போலியானது என சான்றிதழ் அளிக்க லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சீக்கிய மத புனிதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை ஆய்வு செய்த சீக்கியர்களின் உயர்ந்த அமைப்பான அகால் தக்த், அது உண்மையான வீடியோ தான் என்று உறுதி செய்ததோடு, முதல்வர் பகவந்த் மானை ‘குரு துரோகி’ மற்றும் ‘பந்த் விரோதி’ என்றும் அறிவித்தது. ஆனால், ஆம் ஆத்மி கட்சியினர் கடந்த 8ம் தேதி இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தனர். முதல்வர் பகவந்த் மான் தரப்பில், அந்த வீடியோவில் இருப்பது அவர் கிடையாது என்றும், அவரை அவதூறு செய்வதற்காக அவரைப் போன்றே இருக்கும் ஒரு நடிகரை வைத்து உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வீடியோ குறித்து இரண்டு தனியார் ஆய்வகங்கள் ஆய்வு செய்து, அது போலியானது என சான்றிதழ் அளித்ததாக பஞ்சாப் அமைச்சரான ஹர்பால் சிங் சீமா அப்போது தெரிவித்தார்.

இந்த நிலையில், அந்த வீடியோவை போலி என நிரூபிக்க தடயவியல் நிபுணருக்கு பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரிகள் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குருகிராம் போலீசார் தற்போது புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அங்கித் மற்றும் அருண் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தடயவியல் நிபுணர் ஜஸ்பிரீத் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், பஞ்சாப் மாநில டி.ஐ.ஜி அந்தஸ்து மற்றும் எஸ்.பி அந்தஸ்தில் உள்ள இரண்டு அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜஸ்பிரீத் சிங் தனது வாக்குமூலத்தில், ‘கடந்த 15, 16ம் தேதிகளில் குருகிராமில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த 2 போலீஸ் உயர் அதிகாரிகள், வீடியோவை செயற்கை நுண்ணறிவு மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என அறிக்கை தயாரிக்கும்படி என்னை கட்டாயப்படுத்தினர்’ என்று தெரிவித்துள்ளார். இதற்காக ஜஸ்பிரீத்திடம் 10 லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. அதில் 7.5 லட்சம் ரூபாயை அவர் தனது உதவியாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தும், 2.5 லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும், அங்கித் என்பவருக்கு 50,000 ரூபாயை ஆன்லைன் மூலமாக மாற்றியதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவ்விவகாரம் பஞ்சாப் அரசியலில் பெரும் பூதாகரமாக பேசப்பட்டு வருகிறது.

 

Related Stories: