கோபி, ஜூன் 22: கோபி அருகே கொடிவேரி அணையில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் விழுவதாலும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதால் ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.
இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்கே முறை வைத்தே தண்ணீர் வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், அணையில் இருந்து குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்படுவதால் கொடிவேரி அணை பகுதியில் தண்ணீர் விழுவது முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஓரளவு சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்த நிலையில் குளிக்க முடியாததால் அணையின் மணல் போக்கி பகுதியில் வெளியேறிய குறைந்த தண்ணீரில் குளித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.
