ஆளுநர் உரையில் காட்டிய வேகத்தை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் காட்ட வேண்டும்: தவெக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சடப்பேரவையில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் வாசித்துள்ள முதல் உரையில், மாநில உரிமைகளையும் மக்கள் நலனையும் முன்னிறுத்தும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பாராட்டுதலுக்குரியது. முந்தைய ஆட்சிகளைப் போலவே தமிழ்நாட்டின் சுயமரியாதை மற்றும் மாநில உரிமைக் கொள்கைகள் இந்த ஆட்சியிலும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்ற உறுதிமொழி வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் எப்போதும்போல இருமொழிக் கொள்கையே தொடரும் என்ற அறிவிப்பும், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாடும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும், ஒன்றிய அரசிடமிருந்து தமிழகத்துக்கான நிதிப்பகிர்வினைப் பெற சட்டவல்லுநர் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், தமிழகத்துக்கான ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிடப்படும் என்ற பிரகடனமும் மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான மிகச் சரியான நகர்வுகளாகும்.

மாநில உரிமைகளை காப்பதிலும், தமிழ் மொழி நலன், நிதி உரிமை, சுற்றுச்சூழல் மற்றும் தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதிலும் இந்த ஆளுநர் உரை ஒரு நல்ல தொடக்கமாக தெரிகிறது. ஆனால், வெறும் கொள்கை பிரகடனங்கள் மட்டும் சாமானிய மக்களின் பசியையோ அல்லது பொருளாதார தேவைகளையோ தீர்த்து விடாது. புதிய அரசு, ஆளுநர் உரையில் காட்டிய அதே வேகத்தை, தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் காட்ட வேண்டும். எதிர்வரும் முழுமையான பட்ஜெட்டிலாவது இந்த வாக்குறுதிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, திட்டங்கள் முறையாகதொடங்கப்பட வேண்டும்.

Related Stories: