சட்டப்பேரவை நேரலையை நிறுத்தியதற்கு முதல்வரின் திணறல் வெளிப்பட்டு விடும் எனும் பயம்தான் காரணமா..? எச்.ராஜா சரமாரி கேள்வி

சென்னை: சட்டப்பேரவை நேரலையை நிறுத்தியதற்கு முதல்வரின் திணறல் வெளிப்பட்டு விடும் எனும் பயம் தான் காரணமா என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் மக்கள் காணும்படியாக நேரலை செய்வோம் என தற்பெருமை பேசி வந்த தவெக அரசு இன்று மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது எதிர்கட்சிகளின் தலைவர்கள் பேசுவது வரை மட்டுமே நேரலை செய்தார்கள். அதன் பிறகு ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடக்க துவங்கியதும் நேரலை நிறுத்தப்பட்டது.

பேப்பரில் எழுதி வைத்த தீர்மானங்கள் வரை மட்டும்தான் முதல்வரால் ஓரளவு சமாளித்து படிக்க முடியும். மற்றபடி எதிர்கட்சிகள் எழுப்பும் தடாலடி திடீர் கேள்விகளுக்கு தானாக பதிலளிக்க முடியாமல் முதல்வர் திணறுவார் எனும் பயம் காரணமாக இந்த நேரலை நிறுத்தப்பட்டதா?.

மக்கள் காண முடியாவிட்டாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் முதல்வரின் திணறலும், தட்டுத்தடுமாற்றங்களும் வெளிவரத்தானே செய்யும்? கத்தரிக்காய் முத்தினால் கடைக்கு வந்தே தீரும் என்பதுபோல சட்டமன்றத்தில் நடப்பவற்றை முதல்வர் இரும்புத்திரையே போட்டு மறைத்தாலும் ஜனநாயகத்தில் அவை அன்றே வெளி வந்துவிடும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: