திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதனை திறந்து வைத்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவினர் தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், வாக்களித்த மக்களை மதிக்காமல் 20 நாட்களுக்குள் ராஜினாமா செய்து விட்டு கட்சி மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஆரோக்கியமற்ற அரசியலை தவெக ஊக்குவிக்கக் கூடாது. அடிக்கடி இடைத்தேர்தல்கள் வருவது நல்ல சூழல் அல்ல என்பதால், இதுபோன்ற கட்சித் தாவல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மக்கள் மீது எந்தவித சுமையையும் ஏற்றாமல், அரசுக்கான வருவாயைப் பெருக்குவது குறித்து தமிழக அரசு யோசிக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் வருவாயைப் பெருக்குவதற்கான புதிய திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த தெளிவான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். பாலியல் குற்ற வழக்குகளை நீதிமன்றங்களில் பல ஆண்டுகள் இழுத்தடிக்காமல், விரைவு நீதிமன்றங்கள் மூலமாக விசாரித்து குற்றவாளிகளுக்கு உடனடியாகத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு கூறினார்.
