பெரியாறு அணையில் 152 அடி நீர் சேமிப்பது சாத்தியமில்லை: தவெக எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

கூடலூர்: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பாசன விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான முக்கிய நீராதாரமாக 152 அடி உயரமுள்ள பெரியாறு அணை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் கேரளத்தின் தனியார் மலையாள செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை கம்பம் தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த பேட்டியில், ‘‘பெரியாறு அணையில் நீர்மட்டம் உயரும்போது, உபரி நீர் இடுக்கி அணைக்குச் சென்று அங்கிருந்து அரபிக்கடலில் வீணாகக் கலக்கிறது. எனவே அந்த உபரிநீரைத் தமிழகப் பகுதிக்கு முழுமையாகத் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாறு அணையில் 152 அடி வரை நீரை சேமிப்பது சாத்தியமில்லை’’ என்றார். 152 அடி அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழகம் போராடி வரும் நிலையில், தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ராவின் இந்த கருத்து விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘‘கேரள அரசிற்கு சாதகமான கருத்துக்களை தவெக எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதை அவர் திரும்ப பெறுவதோடு, கருத்துகளைத் தெரிவிக்கும் முன், அணை குறித்து முழுமையான தெளிவு பெற வேண்டும்’’ என்றார்.

Related Stories: