கோவை: மகளிர் உரிமைத்தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.2500 ஆக உயர்த்துவது இப்போதைக்கு இல்லை என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் எய்ம்ஸ் இடம் தேர்வு குறித்து ஆலோசனை செய்து உள்ளோம். எய்ம்ஸ் மருத்துவமனை இடம் தேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். மதுரை எய்ம்ஸ் என்ன நிலையில் உள்ளது என ஆய்வு செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கழிவறைகள், தூய்மையான வளாகம் மற்றும் நோயாளிகள் காத்திருப்பு நேரம் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக இரண்டு மாணவர்களை இழந்து இருப்பது வருத்தம் அளிக்க கூடிய விஷயம். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் தவெக நிலைப்பாடு. நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானது. கிராமப்புற, ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வு வேண்டாம் என்பது எங்களது நிலையான முடிவு. கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும். அதை ஆளுநர் உரையில் கொண்டு வந்து இருக்கிறோம். நீட் தேர்வு ரத்து குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். தவிர சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வோம். மாணவர்கள் நீட் தேர்வில் தவறான முடிவு எடுக்க கூடாது. நீட் மறுதேர்வு காரணமாக மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருப்பது உண்மை தான். இதற்காக தான் அரசு உதவி எண்கள் வெளியிட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டம், அன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அருண்ராஜிடம் செய்தியாளர்கள், தேர்தல் வாக்குறுதிப்படி மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், மாநிலத்தின் நிதிநிலைமை சரியில்லை. படிப்படியாக அதனை சரி செய்த பின்னர் தான் வழங்க முடியும். இப்போதைக்கு இல்லை என தெரிவித்தார்.
