அமைச்சர்கள் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா 2 முறை பவர் கட் – இருண்டு கிடந்தது தவெக தலைமை அலுவலகம்: அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதால் அவலம்

சென்னை: அமைச்சர்கள் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் விழாவில் 2 முறை மின்தடை ஏற்பட்டதால் இருளில் மூழ்கியது தவெக தலைமை அலுவலகம். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிப்படும் நிலையில், ஆளும் கட்சி அலுவலகமும் மின்வெட்டுக்கு தப்பவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலை மையப்படுத்தி மற்ற கட்சி நிர்வாகிகளை தங்களை நோக்கி இழுக்கும் வேலையில் தீவிரம்காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் பல்வேறு கட்சியினர் விலகி, தவெகவில் இணைந்து வருகின்றனர்.

கடந்த மாதம் அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த சில நிமிடங்களில் தவெகவில் இணைந்தனர். மேலும், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பலர் தவெகவில் இணைந்தனர். கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற கட்சிகளில் இருந்து வரும் நிர்வாகிகள் தவெகவில் இணையும் விழாக்களை நடத்தி வருகிறது தவெக.

இந்நிலையில், நேற்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில், கம்பம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்ற ஜெகநாத் மிஸ்ரா, தனது மக்கள் முன்னேற்றக் கழகத்தை தவெகவில் இணைத்தார். அதேபோல், அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கோமதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.என்.சுப்ரமணியன், நடிகர் மன்சூர் அலிகான், அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை நேற்று தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர்.

முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வந்திருந்த மாற்றுக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகம் திறக்காத நிலையில், நுழைவாயிலில் காலை 8 மணி முதல் காத்திருந்தனர். பிறகு தவெக அலுவலகக் கதவுகள் திறக்கப்பட்டதும் அவர்கள் அனைவரும் முண்டியடித்து உள்ளே சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இரண்டு முறை மின்தடை ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவிவரும் சூழலில், அதன் தொடர்ச்சியாக தவெக அலுவலகமும் மின்தடையால் இருண்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ராஜ்மோகன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது; கட்சியில் சேர்ந்த எங்களுக்கு இன்னமும் பதவி கொடுக்கவில்லை என நிறைய பேர் சொல்வார்கள். நீங்கள் வந்தால் இது கொடுப்போம், அது கொடுப்போம் என தவெக வியாபாரம் செய்யாது. அனைவருக்கும் கூடிய சீக்கிரம் தலைவர் பொறுப்பு கொடுப்பார். 90 சதவீத அதிமுகவினர் தவெகவுக்கு வரத்தொடங்கி விட்டார்கள். அதிமுகவும் தவெகவும் ஒரே குடும்பம்தான். வரும் உள்ளாட்சி தேர்தலில் 99 சதவீத இடங்களில் வெற்றிபெற்று வரலாறை உருவாக்குவோம். அதிமுக தொண்டர்களும் தவெக தொண்டர்களும் இணையும்போது இதை தவிர தமிழகத்தில் மிகப்பெரிய சக்தி இருக்க முடியாது. எல்லா நதிகளும் கடலை நோக்கி வருவதைப்போல, அனைவரும் தவெகவை நோக்கி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: