டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு..!!

டெல்லி: டெல்லியில் தமிழக முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் நேற்று டெல்லி சென்றார்.

அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று காலை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், தமிழ்நாடு இல்ல வளாகத்தில் உள்ள உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உணவகத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து நேர்ந்ததால் பதற்றமான சூழல் நிலவியது. புகைமூட்டம் ஏற்பட்டதையொட்டி காவலர்கள் உடனடியாக அங்கிருந்தவர்கள் வெளியேற்றினர். எனினும், உடனடியாகத் தீ அணைக்கப்பட்டதால் மிகப்பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து டெல்லி போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உணவகத்தில் இருந்த ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Related Stories: