உலகின் சிறந்த உணவு நகரங்கள் பட்டியல்: பெங்களூருவுக்கு 13வது இடம்

புதுடெல்லி: உலகின் மிகச்சிறந்த உணவு நகரங்களின் பட்டியலை டைம் அவுட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இருந்து பெங்களூரு நகரம் இடம் பெற்றுள்ளது. மக்கள் எங்கிருந்து வந்தாலும், அவர்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் உணவுக்கு உண்டு. பயணிகள் உணவகங்கள், கபேக்கள் மற்றும் உள்ளூர் சிறப்பு உணவுகளை மையமாகக் கொண்டு தங்கள் பயணத் திட்டங்களை அமைக்கும்போது, ‘இங்கு என்ன சுவையாக இருக்கும்?’ என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. இதனால்தான் உலகின் சிறந்த உணவு நகரங்கள் போன்ற தரவரிசைகள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. இந்த ஆண்டு, இந்தியாவும் தனது சுவையான உணவு கலாச்சாரத்தால் டைம் அவுட் நிறுவனம் வெளியிட்ட உலகின் சிறந்த உணவு நகரங்கள் 2026 பட்டியலில் இடம் பெற்று முத்திரை பதித்துள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த பெங்களூரு நகரம் உலக அளவில் 13வது இடத்தைப் பிடித்துள்ளது.

பென்னே தோசை, டோன்னே பிரியாணி மற்றும் கோகம் கலந்த காக்டெய்ல் ஆகிய இவை அனைத்தும் பெங்களூருவின் உணவு மற்றும் பான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இதனைத் தவறவிடவே முடியாது. அதற்குப் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரமே இதற்குச் சான்றாக அமைகிறது. ஆம், இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு, 2026 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த 20 உணவு நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பாரம்பரிய டிபன் அறைகள் மற்றும் ராணுவ ஓட்டல்கள் முதல் காலை உணவு கபேக்கள் மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பார் கலாச்சாரம் வரை, பெங்களூருவில் உணவுப்பிரியர்களுக்கான அனைத்தும் உள்ளன.

இந்தத் தரவரிசையானது, உலகெங்கிலும் உள்ள 24,00-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. அவர்களிடம் தரம், மலிவு விலை மற்றும் பன்முகத்தன்மை போன்ற காரணிகளின் அடிப்படையில் தங்கள் உள்ளூர் உணவு வகைகளை மதிப்பிடுமாறு கேட்கப்பட்டது. பெங்களூருவில் 82 சதவீதம் பேர் அதன் உணவு வகைகளை நல்லது அல்லது அற்புதமானது என்று மதிப்பிட்டனர். கிட்டத்தட்ட பாதி பேர் அதை உற்சாகமானது என்று விவரித்தனர். பெங்களூரு இந்திராநகர், கோரமங்களா மற்றும் எம்.ஜி. ரோடு போன்ற பகுதிகளில், ஒவ்வொரு உணவகமும் வித்தியாச உணவு கலாச்சாரத்தை கொண்டுள்ளன. மொத்தத்தில், பிராந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய சமையல் குறிப்புகள் முதல் உயர்தர கைவினை காக்டெய்ல்கள் மற்றும் உலகளாவிய உணவு அனுபவங்கள் வரை பெங்களூருவில் அனைத்தும் கிடைப்பதால் பெங்களூரு நகரம் உலக தர வரிசை பட்டியலில் 13வது இடத்தை பிடித்து சாதித்துள்ளது.

Related Stories: