என்டிஏ கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு: இந்தியாவின் 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்

புதுடெல்லி: ‘இந்தியாவின் 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும்’ என தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்று 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேலும், இந்தியாவில் தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகிக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். பிரதமராக நேரு பதவி வகித்த 4,398 நாட்கள் சாதனையை மோடி நேற்று முறியடித்தார். இதையொட்டி, டெல்லி பாரத் மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பாஜ தேசிய தலைவர் நிதின் நபின், ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும், என்டிஏ ஆளும் 22 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களும், அனைத்து கூட்டணி கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அதிமுக சார்பில் தம்பிதுரை எம்.பி கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமை மற்றும் பொதுச் சேவைக்கான அயராத அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரதமர் மோடி தலைமையில் வளர்ந்த இந்தியா இலக்கை நோக்கி பணியாற்ற உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியின் 12 ஆண்டுகால ஆட்சியின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று, இந்த நாட்டை காங்கிரசின் மோசமான பிடியிலிருந்து விடுவித்ததுதான். காங்கிரஸ் இந்தியாவை ஊழல் எனும் பாதாளத்தில் தள்ளியது. தவறான ஆட்சியின் மூலம் இந்தியாவை நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளியது. 2014ல் நாட்டின் தலையெழுத்து மாறியது. காங்கிரசின் துரோகத்திற்குப் பிறகு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்தனர். என்டிஏ ஒரு குடும்பமாக மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாங்கள் வலுப்படுத்தியுள்ளோம். எங்களை பொறுத்த வரை கட்சியை விட தேசமே பெரியது. நாடே முதன்மையானது. சீர்த்திருத்தங்கள் கட்டாயமல்ல, அவை எங்கள் உறுதியான நம்பிக்கை.

என்னை பொறுத்த வரை மக்களே கடவுளின் வடிவம். அப்படிப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை என்டிஏ அரசு நிறைவேற்றி உள்ளதில் நான் பெருமிதம் கொள்கிறேன். தேசிய அளவில் அரசியல் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இவ்வளவு நீண்ட காலம் அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை எனக்கு வழங்கியது அவர்களின் முதிர்ச்சியை காட்டுகிறது. மிக நீண்ட பதவிக்காலத்தை கொண்ட பிரதமராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றதை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். 2014க்கு முந்தைய பல ஆண்டுகள் ஸ்திரத்தன்மையின்மை மற்றும் கொந்தளிப்புகள் நிறைந்ததாக இருந்தன. ஆனால் இப்போது மக்கள் நிலையான அரசின் செயல்பாட்டை காண்கிறார்கள். அதன் உறுதியான முடிவெடுக்கும் திறனை பாராட்டுகிறார்கள்.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு ஒரு தனிநபருக்கோ அல்லது கட்சிக்கோ உரியது அல்ல. அது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உறுதியான லட்சியமாக மாறியுள்ளது. 2014 முதல் 2026 வரையிலான பயணம் வெறும் புள்ளிவிவரங்கள் சார்ந்ததல்ல. இது முதன்முறையாகத் தனது முழுத் திறனுடன் செயல்படத் தொடங்கியுள்ள இந்தியாவின் கதை. லட்சிய இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைவதற்காக அயராது உழைக்கும் இந்தியாவின் கதை இது. என்டிஏ ஆட்சியில் இந்தியாவின் 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

அமைச்சரவை பாராட்டு;
பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதமராக தொடர்ந்து அதிக காலம் பதவி வகித்த பெருமையை பெற்றதற்காக மோடியை பாராட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஜனநாயகப் பயணத்தில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் என தீர்மானத்தில் கூறப்பட்டது. இந்த சாதனையை பாராட்டி அமைச்சரவை உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தினர். வளர்ந்த இந்தியா குறித்த மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சரவை, தேசிய பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் மோடியின் தலைமையை பாராட்டியது.

ஜனாதிபதி, உலக தலைவர்கள் வாழ்த்து;
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து எழுதிய கடிதத்தில், சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மீது பிரதமர் மோடி கொண்ட கருணையும், வரிசையில் கடைசியில் உள்ள ஒருவரையும் உயர்த்த வேண்டுமென்ற லட்சியத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பையும் கண்டு நெகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுதவிர பிரதமர் மோடிக்கு ஒன்றிய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான்டெர் லியன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, தென் கொரியா அதிபர் லீ ஜே மியுங் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

Related Stories: