அமெரிக்காவில் ராமர் குறித்து சர்ச்சை பேச்சு; ராகுல் காந்திக்கு எதிரான புகாரை மீண்டும் விசாரிக்க எம்பி,எம்எல்ஏ கோர்ட் உத்தரவு

வாரணாசி: அமெரிக்காவில் கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்திக்கு எதிரான புகாரை மீண்டும் விசாரிக்க கீழமை நீதிமன்றத்துக்கு எம்பி,எம்எல்ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள பிரவுன் பல்கலை கழகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசும் போது கடவுள் ராமர் சம்மந்தப்பட்ட கதைகள் புராண கதைகள் என்று குறிப்பிட்டிருந்தார். இது இந்து மதத்தை நம்புவோரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் ராகுல் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி வழக்கறிஞர் ஹரிசங்கர் பாண்டே என்பவர் வாரணாசி கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வாரணாசி எம்பி எம்எல்ஏ நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை பாண்டே தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி யஜூர்வேத் விக்ரம் சிங் தொழில்நுட்ப காரணங்களின் அடிப்படையில் புகாரை நிராகரிக்க முடியாது என்றும் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்து பொருந்தக்கூடிய சட்டத்தின்படி உத்தரவை பிறப்பிக்குமாறு கீழமை நீதிமன்றத்திற்கு நேற்று உத்தரவிட்டார்.

ஹரிசங்கர் பாண்டே கூறுகையில், வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியிருந்ததால் வழக்கு தொடர ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பதால் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் புகாரை தள்ளுபடி செய்தது. ராகுல் காந்தி எம்பியாக இருந்தாலும், சிறப்பு வழக்கு தொடர கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்ற பிரிவில் அவர் வரமாட்டார் என்று எம்பி, எம்எல்ஏ நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார் என்றார்.நீதிமன்ற உத்தரவையடுத்து ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.

Related Stories: