ராஜ்ய சபா தேர்தல் முடிந்தவுடன் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம்: 2027ல் 7 மாநில தேர்தல் வருவதால் பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை

 

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் மற்றும் பாஜக கட்சி அமைப்பில் சீரமைப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மூன்றாவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டில் மாநிலங்களவை பதவி காலம் முடிவதற்கு முன்னதாகவே அமைச்சர்களாக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ஆர்.சி.பி.சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பிறகு அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தற்போது வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள 24 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு, கட்சி மற்றும் ஆட்சியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தலில் குஜராத்தில் 4 இடங்கள், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 2 இடங்கள், மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தலா 1 இடம் என மொத்தம் 10 இடங்களில் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதற்கிடையே, டெல்லி மாநில தலைவராக ஒன்றிய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநில தலைவராக ஒன்றிய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நியமிக்கப்பட்டார்.

கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையிலான புதிய குழு இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமைச்சரவையில் உள்ள சில முக்கிய தலைவர்கள் கட்சிப் பணிக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அமைச்சர்களான ரவ்னீத் சிங் பிட்டு மற்றும் ஜார்ஜ் குரியன் ஆகியோருக்கு வரும் 18ம் தேதி நடக்கும் மாநிலங்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களின் பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், வரும் தேர்தலில் அவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியான்ட் சிங் பேரன் ரவ்னீத் சிங் பிட்டு, அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் நடக்கும் சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அதேபோல் குஜராத்தில் ராஜுபாய் சுக்லா, முகேஷ்பாய் ரத்வா, மான்சிங் பார்மர் மற்றும் ஜிதேந்திர கன்சாரியா ஆகிய 4 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஓபிசி மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 2027ம் ஆண்டு உத்தரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 7 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளதால், ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்றும், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் கூடுதல் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: