சென்னை: கவிஞர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்ஜிஆர் இறந்தபோது 1988ம் வருடம் ஜனவரியில், அதிமுக பிளவுபட்ட நேரத்தில், அவரது மனைவி ஜானகிக்கு காங்கிரஸ் ஆதரவு தரும் என அன்றைய ஜனாதிபதி வெங்கட்ராமனிடம் கூறிவிட்டு, கடைசி நேரத்தில் பல்டி அடித்து, ஜானகி எம்ஜிஆர் ஆட்சி கலைக்க காரணமாக இருந்தவர்கள் தானே காங்கிரசார். 1976ம் ஆண்டு ஜனநாயக குரலை அடைக்காதீர்கள், இந்தியாவின் மூத்த தலைவர்களை வெளியில் விடுங்கள் என்று தீர்மானம் போட்டதற்கு திமுக ஆட்சியையே ஜனாதிபதி வைத்து கலைத்தவர்கள் தானே காங்கிரசார்.
1991ல் விடுதலைப்புலி ஆதரவு என அற்ப காரணம் காட்டி, திமுக ஆட்சியை கலைத்த புண்ணியவான்கள் தானே காங்கிரசார். திமுக வாரிசு அரசியலாம், மாணிக்கம் தாகூர் கூறுகிறார். வாரிசு அரசியலை இந்தியாவிற்கு தந்ததே காங்கிரஸ் தான். முதலில் நேரு, பின் நேரு மகள் இந்திரா, இந்திரா மகன் ராஜிவ், ராஜிவ் மனைவி சோனியா, சோனியா மகன் ராகுல், ராகுல் தங்கை பிரியங்கா என அத்தனை பேரும் எம்.பி.க்கள். மாணிக்கம் தாகூர் மட்டும் என்ன வாழுதாம், சுதர்சன நாச்சியப்பனின் அண்ணன் மகன் என்கிற தகுதியோடு டெல்லி சென்று திரும்பியதால், எம்.பி. ஆனவர்.
தமிழகத்தில் பல போராட்டம் செய்து சிறைக்கு சென்று எம்.பி. ஆனவரா மாணிக்கம் தாகூர்? காங்கிரசை ஆதரிக்காதவர் எல்லாம் பாஜதான் என்கிற கேவலமான, தரம் கெட்ட வார்த்தைகளை மீண்டும் மீண்டும் மாணிக்கம் தாகூர் கூறக்கூடாது என எச்சரிக்கிறேன். ஈரம் காயாமல் எதிரியிடம் ஓடிச் சென்றது காங்கிரஸ். கவர்னர் ஆட்சி கூடாது என்பதற்காகத் தான் தவெகவுக்கு ஆதரவு என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாதிரி வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டியது தானே. எதற்காக முட்டி போட்டு, பல் இளித்து, ராஜ்யசபா உறுப்பினர் கேட்டு வாங்க வேண்டும், பிச்சை கேட்பதற்கும் ஒரு தகுதி வேண்டாமா? . திமுக பாடம் கற்க வேண்டுமாம் மாணிக்கம் தாகூர் கூறுகிறார்.
பாடம் கற்க வேண்டியது காங்கிரஸ் இல்லையா? எத்தனை பட்டாளம் கூட்டி வந்தாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு எம்.பி தொகுதி கூட வெல்ல முடியாது. இரட்டை வேடம் திமுக போடுகிறதாம் மாணிக்கம் தாகூர் கூறுகிறார். ஆமாம் நாங்கள் தான் கேரளாவில் கம்யூனிஸ்ட் பினராயி விஜயனை வீழ்த்தியது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் அலுவலகம் சென்று துண்டு போட்டு பிரவீன் சக்கரவர்த்தி மாநில அமைச்சர்களுடன் சென்று எம்.பி.க்கு வாக்கு கேட்டு கெஞ்சுவது. மீனோடு சண்டை மீன் குழம்போடு ராசி.
அன்று போபர்ஸ் ஊழல் முதல் இன்று நேஷனல் ஹெரால்டு ஊழல் நீதிமன்ற படிக்கட்டு ஏறும் சோனியா, ராகுல் என ஊழல், ஆனால் மு.க.ஸ்டாலின் மீது பொய்யாக கூட வழக்கில்லை, எங்கள் தலைவர் தூய்மையானவர். மீண்டு வருவார், மீண்டும், மீண்டும் வருவார். தவெகவுக்கு பாதிப்பு என்றால் யூடியூபர் அரெஸ்ட், திமுகவின் மீது பொய் செய்தி கூறினால் ரெஸ்டா, ஜெகதீசன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?.
போதை என பொய்யை பேசிய ஜெகதீசன் விடுவிப்பு, பாதை மாறாது செய்தி வழங்கிய மாரிதாஸ் கைதா? 25 எம்எல்ஏக்களை தவெக தவிக்க விட்டது, தவெகவையே இந்தியா கூட்டணியில் சேரவிடாமல் காங்கிரஸ் தவிக்கவிட்டது. இந்தியா கூட்டணியில் தவெக சேர்க்கப்படாவிட்டால் காங்கிரசின் துரோகம், அழைத்தும் இந்தியா கூட்டணிக்கு தவெக வராவிட்டால் காங்கிரஸ் முகத்தில் கரிப்பூசியதற்கு சமம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
