தினசரி மின் வெட்டால் இருளில் தவிக்கும் தமிழகம் நிர்வாக திறமையின்மையால் மக்கள் பரிதவிப்பு: ஹார்ட் டிஸ்க் – பியூஸ் கேரியர் திருட்டு என உருட்டு

* ரீல்ஸ் காட்டி வெற்றி; ரியல் நிர்வாகத்தில் தோல்வி: தொடரும் அமைச்சரின் மழுப்பல் பேச்சு

சென்னை: தமிழகம் முழுவதும் தினசரி மின்வெட்டு பிரச்னை தலைவிரித்தாடும் நிலையில், தவெக அரசின் நிர்வாக திறமையின்மையால் அவதியுறுகிறோம் என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரசார பாடலில் ‘நான் தன்னந்தனி ஆளு, நீ ஏளனமா பாரு, கொஞ்சம் நவுந்தேன்னா இங்க எட்டு கோடி பேரு,’ என பாடல் தொடங்கும். தற்போது தவெகவிற்கு வாக்களித்து ஆட்சியில் அமரவைத்த பின்னர் ஏன் வாக்களித்தோம் என தினசரி அந்த எட்டு கோடி பேரும் கேட்கும் அளவிற்கு மாநிலத்தில் ஏற்படும் மின்வெட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்ளே சான்று.

விஜய் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற மிக குறுகிய காலத்திலேயே, ஒட்டுமொத்த மாநிலமும் கடுமையான அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்னையில் சிக்கித் தவித்து வருகிறது. தேர்தலின்போது, ‘மாற்றம் தருவோம்,’ என முழங்கிவிட்டு, தற்போது நிலவும் மின் நெருக்கடிக்கு தீர்வு காணாமல், மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தொடர்ந்து மழுப்பலான காரணங்களையும் கட்டுக்கதைகளையும் கூறி வருவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில், இந்த மின்வெட்டுகளுக்கு பின்னால் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளும், திட்டமிட்ட சதிகளும் இருப்பதாக அவர் கூறிவருகிறார். பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டியது தற்போதைய தவெக அரசின் முதன்மை கடமை. ஆனால், மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் மின்வெட்டு ஏற்படும் போதெல்லாம், முந்தைய திமுக ஆட்சியின் முறைகேடுகளையும், மின்வாரியத்தின் கடன் சுமைகளையும் மட்டுமே திரும்ப திரும்ப பேசி வருகிறார்.
புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாத காலம் ஆகிறது.

ஆனால் தொடரும் மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய முடியாமல் திணறி வரும் மின்சாரத்துறை அமைச்சர் இன்னும் பழைய ஆட்சியை குறை கூறிக்கொண்டிருப்பது தவெக அரசின் மீதான நிர்வாகத் திறமையின்மையையே காட்டுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ‘ரீல்ஸ்’ காட்டி ஆட்சிக்கு வந்துவிட்டு, ரியல் நிர்வாகத்தில் இந்த அரசு தோற்று விட்டதா என்ற பலத்த விமர்சனம் எழுந்துள்ளது.

அண்மையில் தொடரும் மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க தெரியாமல் மக்களை திசைத்திருப்ப தமிழக மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் மின்வாரிய தரவுகளை கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் அதில் எந்த ஆதாரபூர்வமான தடயங்களும் இல்லை என தேய்ந்து போனது ஒருபுறமிருக்க, டெண்டர் முறைகேடுகளை காரணம் காட்டி புதிய திட்டங்கள் முடக்கப்பட்டு வருகின்றன. முந்தைய சோலார் டெண்டர்களில் குளறுபடிகள் இருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மொத்த திட்டங்களையும் முடக்கி வைப்பது எந்த வகையில் நியாயம் என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரம் மூலமாக உள்கட்டமைப்பை மேம்படுத்த புதிய டெண்டர்களை உடனே கோராமல் காலம் கடத்துவது, இந்த மின் தட்டுப்பாட்டை அரசே திட்டமிட்டு உருவாக்குவது போல உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். அதேபோல், மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளன, மின்சுமை அதிகமாக உள்ளது எனத் தொழில்நுட்பக் காரணங்களை அமைச்சர் அடுக்கினாலும், அதைத் தடுக்க அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது என்ற கேள்வி எழுகிறது.

கோடைகாலம் மற்றும் மின் தேவையின் உச்ச வரம்பை முன்கூட்டியே கணிக்கத் தவறியது ஏன்?. மின்வாரியத்தில் 70,000 பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறும் அமைச்சர், போர்க்கால அடிப்படையில் புதிய ஆட்களை நியமித்துத் தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யாமல், வெறும் புள்ளிவிவரங்களை மட்டும் ஊடகங்களில் பேசுவது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீடிக்கும் தொடர் மின்வெட்டின் அவநிலையின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் கூட மாங்காடு, பூந்தமல்லி, ஆவடி, போரூர் போன்ற இடங்களில் மின்வெட்டு பிரச்னை இருந்தது. இதுகுறித்து அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்தால் ஆவடி போன்ற சில பகுதிகளில் நள்ளிரவில் மர்ம நபர்கள் மின் கம்பங்கள் மற்றும் மின்பெட்டிகளில் உள்ள ‘பியூஸ் கேரியர்களை’ பிடுங்கிச் சென்று செயற்கையான மின்வெட்டை உருவாக்குவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

அரசை அவமானப்படுத்தவும், மக்களைப் போராட்டத்திற்கு தூண்டவும் இத்தகைய சதி வேலைகள் நடக்கின்றன என்று கூறி சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர் என கூறுகிறார். ஆனால், எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் பியூஸ் திருட்டுகளை காரணம் காட்டி, தமிழகம் முழுவதும் நிலவும் ஒட்டுமொத்த மின்வெட்டுப் பிரச்னைக்கும் ‘சதி’ என்று முத்திரை குத்துவது பொறுப்பற்ற தனமானது.

அத்தகைய நபர்களைக் கட்டுப்படுத்துவதும் அரசின் கடமையே ஆகும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு பிரச்னைக்குக் கடந்த கால பிரச்னைகளையே பேசிக்கொண்டு இல்லாமல், அதனைச் சரி செய்ய வேண்டிய முழு பொறுப்பும் தற்போதைய தவெக அரசுக்கே உரியதாகும். எனவே, போர்க்கால அடிப்படையில் புதிய மின்மாற்றிகளை அமைப்பதும், நிர்வாகத் திறனை மேம்படுத்துவதும் மட்டுமே தற்போதைய இருள் சூழ்ந்த நிலைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை.

Related Stories: