தவெக ஆட்சிக்கு வந்த பின்பு 30 பாலியல் சம்பவங்கள் 10 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை யாரும் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை: நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 12வது ஆண்டு கால சாதனையை கொண்டாடும் நிகழ்ச்சி தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்து கட்சி கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 18ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் வந்தே மாதரமும், தமிழ்தாய் வாழ்த்தும் பாட வேண்டும்.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் 30 பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளது. தொடர்ந்து கஞ்சா விற்பனை, எங்கு பார்த்தாலும் படுகொலை, 10 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை யாரும் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை.  தமிழகத்தில் எல்லா இடமும் மின்வெட்டு நிலவுகிறது. அரசாங்கம் தனது கடமையை செய்ய முடியவில்லையா. அல்லது திறனற்ற அரசாக இருக்கிறதா? முதல்வர் அக்கறை கொள்ளவில்லையா? என்று தெரியவில்லை.

தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நீதிமன்ற உத்தரவையே மதிக்கமாட்டேன் என்கிறார். இதை செய்து கொண்டு அவர் சட்டத்துறை அமைச்சராக நீடிக்க வேண்டுமா என்பதையும் நீதிமன்றம் தான் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: