பாஜ நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து அவதூறு கர்நாடகாவில் பதுங்கிய யூடியூபர் முக்தார் கைது: சென்னை சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை

சென்னை: பாஜ விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா குறித்து அவதூறாக பேசிய வழக்கில், கடந்த ஒரு வாரமாக கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தாரை, சென்னை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். தமிழக பாஜ விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கார் மற்றும் பைக் ரேஸராக உள்ளார். சில நாட்களுக்கு முன், அலிஷா அப்துல்லாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.

குழந்தைகள் பிறப்பு குறித்து, யூடியூப் சேனல் ஒன்றில் யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் அவதூறு கருத்துக்களை பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அலிஷா அப்துல்லா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 3ம் தேதி புகார் அளித்தார். அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த 4ம் தேதி யூடியூபர் திருச்சி சூர்யாவை திருச்சியில் அவரது வீட்டில் கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கில் மற்றொரு யூடியூபரான முத்தார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ரகசிய இடத்தில் முகாமிட்டு நேற்று அதிகாலை யூடியூபர் முக்தாரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: