சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்றது. தவெக ஆட்சி அமைக்க கடந்த மே 13ம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, 25 அதிமுக எம்எல்ஏக்கள், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களுக்கு எதிராக கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். இந்த சூழ்நிலையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தனர்.
அதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதுகுறித்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த போது, 3 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்ற உத்தரவை ரத்து செய்ய கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள போது அதனை தவிர்க்கும் வகையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை ஏற்க முடியுமா? என்ற அரசியல் சாசன கேள்வி எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளபோது, ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டது, கட்சித்தாவல் தடை சட்டத்தையும், மக்கள் தீர்ப்பையும் நீர்த்து போக செய்யும் வகையில் உள்ளது. கட்சித்தாவல், ராஜினாமா காரணமாக அடுத்தடுத்து தேர்தல்கள் நடத்த வேண்டியுள்ளதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, அந்த 3 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுக்களை விசாரித்து, முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
