சிங்கப்பெண் சிறப்பு படையை சட்டம்-ஒழுங்கு, விஐபி பந்தோபஸ்து பணிகளுக்கு பயன்படுத்த கூடாது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சிங்கப்பெண் சிறப்பு படையை சட்டம்-ஒழுங்கு, விஐபி பந்தோபஸ்து பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும் மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு படை என்ற புதிய பிரத்யேக பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 2,545 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் மாவட்ட / மாநகர தலைமையக பிரிவுகளுக்காக 49 காவல் ஆய்வாளர்கள், 98 உதவி ஆய்வாளர்கள், 196 இரண்டாம் நிலை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 270 கள பிரிவுகளுக்காக 540 பெண் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,620 இதர பெண் காவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். நிர்வாக பணிகளுக்காக நிர்வாக அதிகாரி, கண்காணிப்பாளர், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்காக மொத்தம் ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் தொடர் செலவினங்களுக்காக ரூ.310.98 கோடியும், உபகரணங்கள் வாங்குவதற்கான தொடரா செலவினங்களுக்காக ரூ.43.68 கோடியும் பிரிக்கப்பட்டுள்ளது. ரோந்து மற்றும் களப் பணிகளுக்காக 319 நான்கு சக்கர வாகனங்களும் (பொலேரோ), 101 இருசக்கர வாகனங்களும் வாங்கப்படவுள்ளன. களத்தில் நடப்பவற்றை தலைமையகம் நேரடியாக கண்காணிக்கும் வகையில், நேரடி ஒளிபரப்பு வசதி கொண்ட பாடி வோர்ன் கேமராக்கள் 270 எண்ணிக்கையிலும், வான்வெளி கண்காணிப்பிற்காக 49 அதிநவீன டிரோன்களும் வழங்கப்படவுள்ளன.

24 மணி நேரமும் இயங்கும் வகையில் பிரத்யேக தலைமையக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, சமூக ஊடக கண்காணிப்பு மற்றும் அவசர அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் அது வடிவமைக்கப்படும். பொதுமக்கள் எளிதில் ஆபத்து காலங்களில் தொடர்பு கொள்ளவும், பாதுகாப்பற்ற சூழல் குறித்து புகைப்படம் / வீடியோக்களை பதிவேற்றவும் வசதியாக காவல் உதவி மொபைல் செயலி மற்றும் அதன் மென்பொருள்கள் மேம்படுத்தப்படும்.

விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள தனியாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு படையானது சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியின் ஒட்டுமொத்த பார்வையின் கீழ் இயங்கும். மாவட்டங்களில் அந்தந்த எஸ்பி மற்றும் மாநகரங்களில் காவல் ஆணையர்களின் நிர்வாக கட்டுப்பாட்டில் இப்படை செயல்படும்.

இந்த சிறப்பு படையில் நியமிக்கப்படும் அதிகாரிகள் மற்றும் காவலர்களை எக்காரணம் கொண்டும் சாதாரண சட்டம்-ஒழுங்கு பணிகள், விஐபி பந்தோபஸ்து அல்லது இதர பொதுவான காவல் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், அவர்கள் பெண்களின் பாதுகாப்பு பணிகளில் மட்டுமே முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும் அரசாணையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: