இயக்குனர் பாரதிராஜா மறைவு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் (திமுக): தமிழ் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு பெரும் வேதனையை தருகிறது. தமிழ்த்திரையுலகிற்கு பேரிழப்பாகிவிட்ட அந்த பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். திரைமொழியில் தனிமொழி பேசி, தனி சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த சினிமா, இவரால் கிராமங்களுக்குள் நுழைந்தன.

கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ் சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார். அவரது படைப்புகளை தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாக பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையை பதித்த அவரை இந்திய திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்.

கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும், தமிழினத்தின் மீதும் பற்றுக்கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. பாரதிராஜாவின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளை கொடுத்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, சினிமா ரசிகர்களின் மனங்களில் – தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்.

முதலமைச்சர் விஜய்: தமிழ் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன். கிராமிய பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றி படங்களை உருவாக்கி, தமிழ் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா.

தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளை பெற்றவர். பாரதிராஜா மறைவு, தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்பட துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்; திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்; தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் பாரதிராஜா. அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

வீரபாண்டியன் (கம்யூனிஸ்ட்): ஸ்டுடியோவில் அடைபட்டு கிடந்த தமிழ் சினிமாவை, கிராமங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கையான காட்சி அமைப்புகளில் மண் வாசனை வீச செய்தவர் பாரதிராஜா. அன்னாரின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து நிற்கும் அவரது வாழ்விணையர், மகள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

ராமதாஸ் (பாமக): பாரதிராஜாவின் முதல் படைப்பு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படவிருந்த நிலையில், அவர் நம்மை விட்டு பிரிந்திருப்பது திரையுலகுக்கு பெரும் இழப்பாகும். அவரது மறைவுச் செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திரையுலகில் தமக்கென தனி வம்சத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அவர். தமிழ்த் திரையுலகம் வாழும் வரை பாரதிராஜா போற்றப்படுவார்.

வைகோ (மதிமுக): பாரதிராஜா நம்மை விட்டு அவர் பிரிந்தார் என நினைக்கையில் கண்கள் குளமாகின்றன. நெஞ்சம் துடிக்கிறது. காவிய நாயகன் மேனியால் மறைந்தாலும், தன் படைப்புக்களால் தொடர்ந்து வாழ்வார்.

பிரேமலதா (தேமுதிக): தமிழ் பாரம்பரியத்தையும், கிராமிய கதைகளையும் திரைப்படங்களுடன் இணைத்து, திரைப்படத்தை ஒரு பாடமாக திரையுலகிற்கு வழங்கி, திரையுலகின் பல்கலைக்கழகமாக விளங்கியவர் பாரதிராஜா. அனைவரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். அவரது இழப்பு திரையுலகிற்கு பேரிழப்பு. அவருடைய ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் திரையுலகினருக்கும், குடும்பத்தாருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜி.கே.வாசன் (தமாக): தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும், கலையுலகத்திற்கும் மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றியவர் பாரதிராஜா. அவரது மறைவு அவரது குடும்பத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

டிடிவி தினகரன் (அமமுக): நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என பல்வேறு நிலைகளிலும் தமிழ் சினிமாவையே தன் உயிர்மூச்சாக கொண்டிருந்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவு என்ற செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் 2ம் தேதி, நான் அவரை சந்தித்து பேசினேன். இந்நிலையில், அவருடைய திடீர் மணம் தமிழ் திரையுலகிற்கு பெரும் இழப்பு.

Related Stories: