தேர்தல் பிரமாண பத்திரத்தில் கிளம்பிய பூகம்பம்; நிதிஷ் மகனின் இன்ஜினியர் பட்டம் போலி: பீகார் அரசியலில் திடீர் பரபரப்பு

 

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் ‘இன்ஜினியர்’ என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் 12ம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவரும் முன்னாள் முதல்வருமான நிதிஷ் குமாரின் மகனான மாநில அமைச்சர் நிஷாந்த் குமார், நீண்டகாலமாக ஒரு ‘இன்ஜினியர்’ என்ற பிம்பத்துடன் பொதுவெளியில் அறியப்பட்டு வந்தார். பல அரசு முறை நிகழ்வுகளிலும் கட்சி கூட்டங்களிலும் கூட அவர் ஒரு பட்டதாரி பொறியாளராகவே சித்தரிக்கப்பட்டார். ஆனால் அவர் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்கள் தற்போது பீகார் அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளன.

நிஷாந்த் குமார் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி, அவர் 1998ம் ஆண்டு பாட்னா அறிவியல் கல்லூரியில் 12ம் வகுப்பை முடித்துள்ளார். அதன் பிறகு ராஞ்சியில் உள்ள பிஐடி மெஸ்ரா கல்வி நிறுவனத்தில் பிஇ படிப்பில் சேர்ந்தார். ஆனால் அவர் 8 செமஸ்டர்கள் கொண்ட அந்தப் படிப்பில் வெறும் 5 செமஸ்டர்கள் மட்டுமே முடித்துவிட்டு, 2001ம் ஆண்டு படிப்பை பாதியில் நிறுத்தி வெளியேறியது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர் ஒரு பட்டதாரி கூட கிடையாது என்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து ராஷ்ட்ரியா ஜனதா தளம் தனது எக்ஸ் தளத்தில், ‘இன்ஜினியர் என்று மக்கள் அழைத்த நிதிஷ் குமாரின் மகன், வெறும் 12ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது.

பிரமாணப் பத்திரத்தில் அவரே தான் பட்டதாரி இல்லை என்று கூறியுள்ளார். வாரிசு அரசியலை எதிர்ப்பதாக நாடகமாடியவர்களின் உண்மை முகம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளது. ஏற்கனவே ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் கல்வித் தகுதியை விமர்சித்து வந்த பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு நிஷாந்த் குமாரின் விவகாரம் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இன்ஜினியர் என்று மக்கள் அழைத்த நிதிஷ் குமாரின் மகன், வெறும் 12ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது. பிரமாணப் பத்திரத்தில் அவரே தான் பட்டதாரி இல்லை என்று கூறியுள்ளார்

Related Stories: