சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இதனையடுத்து, தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 1ம் தேதி துவங்கியது. ஜூன் 8ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் கடந்த திங்கள் காலை 11 மணிக்கு துவங்கிய நிலையில் சுயேச்சை வேட்பாளர்களான தேர்தல் மன்னன் பத்மராஜன் மற்றும் அக்னி ஆழ்வார் ஆகியோர் மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதையடுத்த நேற்று முன்தினம் மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் ஆவடி வி.ஜெயக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை எம்பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரீஷ் சோடங்கர் நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் தவெக தலைவரும் முதல்வருமாக விஜய்யை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்தார்.
இதையடுத்து முதல்வர் விஜய் முன்னிலையில் காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி நேற்று தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கட்சிப் பொறுப்பாளரான நிவேதித் அல்வா, விசிக முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஐயூஎம்எல் எம்எல்ஏவும், அமைச்சருமான ஷாஜகான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் பிரவீன் சக்ரவர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கிய முதல்வர் விஜய்ககு நன்றி. தவெக – காங்கிரஸ் கூட்டணியின் சிறப்பான செயல்பாடுகளையும், மாநிலத்தின் தேவைகளையும் நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க நான் தொடர்ந்து பாடுபடுவேன்’’ என்றார்.
பேட்டியின்போது தமிழகத்தின் குரலாக இருப்பேன் என்றார். உடனே நிருபர்கள் மேகதாது அணை குறித்தும், புதிய கூட்டணி குறித்து தன்னிச்சையாக வெளியிட்டது குறித்தும் கேட்டபோது பதில் அளிக்காமல், இப்போது மனு தாக்கல் மட்டுமே என்று கூறி எஸ்கேப் ஆனார்.
