சென்னை: பாமக சார்பில் சென்னை தி.நகரில் அனைத்துக் கட்சி மற்றும் சமுதாய அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந் தது. பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். அதிமுக, காங்கிரஸ், தவாக, தவெக, பாஜ, நாதக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட 42 கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் நேரில் பங்கேற்கவில்லை என்றாலும், பாமக தலைமைக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பாமகவின் முயற்சிக்கும், கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும் முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர்.
இதில் பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களை பின்பற்றி, 2008ம் ஆண்டின் மத்திய புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டிலேயே இந்த சமூகநீதி சர்வேயை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது . பிறகு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அல்லது தனிக் குழு அமைத்து, காலதாமதமின்றி சாதிவாரி கணக்கெடுப்புப் பணியை தொடங்க வேண்டும், அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய கூட்டுக்குழு,
முதல்வரை நேரில் சந்தித்து, சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வலியுறுத்தி கூட்டாக மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்ததும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்பு மணியை தொலைபேசியில் அழைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் பாமக மற்றும் அனைத்து கட்சிகள் இணைந்து எடுத்த முடிவிற்கு திமுக ஆதரவளிக்கும் என்று கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளது.
