சென்னை: தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழரசு அலுவலகத்தின் இணை இயக்குநராக பணியாற்றி வந்த எம்.சத்தியசீலன் தமிழக முதலமைச்சரின் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், செய்தி மக்கள் தொடர்பு துறையின் கூடுதல் இயக்குநராக இருந்த மாறன், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். எஸ்.ராஜன் (இணை இயக்குனர்) விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். வி.ஆர்.நவநீதகிருஷ்ண குமார் (இணை இயக்குனர்) நீர்வள ஆதாரத் துறையில் இருந்து நினைவகங்கள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். வி.பிரபுகுமார் (இணை இயக்குனர்) இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சீனிவாசன் (துணை இயக்குனர்) முன்னாள் துணை முதல்வர் பிரிவில் இருந்து திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அண்ணாதுரை (துணை இயக்குநர்) தர்மபுரி அரசு போக்குவரத்து கழகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி போக்குவரத்து கழக உதவி இயக்குனராக இருந்த ஜெயா அருள்பதி தூத்துக்குடி போக்குவரத்து கழகத்திற்கும், தூத்துக்குடியில் பணியாற்றிய நவாஸ்கான் பரஸ்பரம் திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
எஸ்.நந்தகுமார் (உதவி இயக்குனர்) ‘தமிழரசு’ அலுவலகத்திற்கும் எஸ்.சுவாமிநாதன் (உதவி இயக்குநர்) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலிருந்து தலைமைச் செயலக செய்தி துறையின் குறிப்பு பிரிவுக்கும், எஸ்.உதயகதிரவன் (உதவி இயக்குனர்) தமிழரசு அலுவலகத்தில் இருந்து தலைமை செயலக நிறுவன பிரிவுக்கும், டி.தமிழ்செல்வன் (உதவி இயக்குனர்) எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் இருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல பணிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
