அதிகாரத்திற்கு ஆசைப்பட்டோம்; தவெகவில் சேர்ந்தோம் என்று ஓப்பனாக சொல்ல வேண்டியது தானே? காதர் மொகிதீனுக்கு திமுக முன்னாள் எம்பி சரமாரி கேள்வி

சென்னை: நாங்கள் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டோம், அதனால் தவெகவில் சேர்ந்தோம் என்று ஓப்பனாகச் சொல்லிவிட்டு போக வேண்டியது தானே என்று காதர் மொகிதீனுக்கு திமுக முன்னாள் எம்பி அப்துல்லா சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய காதர் மொகிதீன், புதிய கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் அமைச்சராகியிருக்கிறார்.

கவர்னர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது, நாட்டில் நிலையான ஆட்சி வேண்டும் என்று பல காரணங்களைக் கூறி முதலில் ஆதரவளித்தார்கள்; பின்பு அமைச்சரவையிலும் இடம்பெற்றார்கள். அதைப்பற்றி நமக்கு எந்த விமர்சனமும் இல்லை. ஆனால், அமைச்சர் பேசுகின்ற பேச்சு ஏதோ விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் போல் இருப்பது உண்மையிலேயே இஸ்லாமியர்களை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது.

நீங்கள் வாங்கிய ஓட்டுகள் அனைத்தும், விஜய் முதல்வராக வரக்கூடாது என்பதற்காக மக்கள் போட்ட ஓட்டுகளே தவிர, அவர் முதல்வராக வர வேண்டும் என்பதற்காகப் போட்ட ஓட்டுகள் அல்ல. புதிய கூட்டணியில் சேர்ந்ததற்கு 1008 காரணங்களைச் சொல்லி மழுப்புகிறார்கள். ‘நாங்கள் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டோம், அதனால் சேர்ந்தோம்’ என்று ஓப்பனாகச் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே?

திமுக என்றைக்கும் சிறுபான்மையினர் மட்டுமல்ல, பாதிக்கப்படுபவன் எவனாக இருப்பானோ அவன் பக்கம் திமுக நிற்கும். 2 கோடி பேர் இருக்கிற ஒரு இயக்கம் தனித்து எங்கே விடப்படும்? 2 கோடி பேர் இருக்கிற இயக்கம் அது தனித்து விடப்பட்டுவிட்டது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

எல்லாத் தரப்பினரின் குரலும் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கூட்டணியில் பலரையும் வைத்திருந்தோமே தவிர, அவங்களுடைய வாக்கு வலிமை என்ன என்பது எல்லாருக்குமே தெரியும். யார் பலத்தில் யார் ஜெயித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பாஜவுடன் கூட்டணி என்று வதந்தி பரப்புகிறார்கள், அதில் எள்ளளவும் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: