ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்ததாக சக வேட்பாளர் ஒப்புதல்; தவெக எம்எல்ஏ பதிலளிக்காமல் ஓட்டம்: செய்தியாளர்களை இழுத்து தள்ளிய நிர்வாகியால் பரபரப்பு

சேலம்: சேலம் மேற்கு தொகுதியில், தேர்தலின்போது ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்ததாக சக வேட்பாளர் ஒப்புதல் அளித்து பேசியதற்கு பதிலளிக்காமல், தவெக எம்எல்ஏ ஓட்டம் பிடித்தார். மேலும், கேள்வி கேட்ட செய்தியாளர்களை இழுத்து தள்ளிய நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மேற்கு தொகுதியில், நடிகர் விஜய்யின் தவெக சார்பில் முன்னாள் இன்ஸ்பெக்டரும், ரியல் எஸ்டேட் அதிபருமான லட்சுமணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனிடையே ஓமலூர் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவிய அதியமான், தீவட்டிப்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், `ஓமலூர் தொகுதியில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட லட்சுமணன், வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் பணம் கொடுத்ததும், அந்த தகவல் ஓமலூர் தொகுதி மக்களிடம் பரவியதும் தான் மிக முக்கிய காரணம்’ என கூறினார்.

இந்நிலையில், சேலம் ஆவின் பால்பண்ணையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. இதில், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ லட்சுமணன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, ஓமலூர் வேட்பாளர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்காமல் அவர் காரில் வேகமாக புறப்பட்டு சென்று விட்டார். அப்போது அவரது உதவியாளர் ஒருவர், செய்தியாளர்களை விலகும்படி கூறி இழுத்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: