சென்னை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட கணினி பராமரிப்பு ஒப்பந்த ஊழியர் கோபிநாத், எழும்பூர் நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 18ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டார். தமிழக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்மாற்றி டெண்டர் மற்றும் நிலக்கரி டெண்டர் தொடர்பான ஆவணங்கள் சேகரித்து வைத்திருந்த ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மலர்விழி, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி போலீசார், ஹார்ட் டிஸ்க் அனைத்தும் கடந்த மே 16 மற்றும் 17ம் தேதிகளில் திருடப்பட்டது உறுதியானது. இந்த வழக்கில் அன்றயை தினங்களில் கணினி பராமரிப்பு பணிகளில் ஈடுபட்ட அரக்கோணத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியர் கோபிநாத் திட்டமிட்டு சிபிஐ வழக்கு தொடர்புடைய ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் நிலக்கரி ஒப்பந்தம் தொடர்பான ஹார்ட் டிஸ்க்குகள் திருடியது தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் நேற்று கோபிநாத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட 18 முக்கிய ஹார்ட் டிஸ்க்குகள் அனைத்தும் பெங்களூரு நிறுவனம் ஒன்றிக்கு ரூ.10 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு விற்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார், கோபிநாத்தை நேற்று முன்தினம் பெங்களூருக்கு அழைத்து சென்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து மின்வாரியத்தில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்க்குகள் உள்பட மொத்தம் 34 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கோபிநாத்திற்கு முக்கிய டெண்டர்கள் பராமரித்து வந்த கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்குகள் குறித்து தகவல் அளித்த மின்வாரிய உயரதிகாரி ஒருவர் பின்னணியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதுபற்றி முழுமையாக போலீசார் விசாரிக்கின்றனர். இந்த திருட்டு தொடர்பாக மின்வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை தனியாக விசாரணை நடக்கிறது. அதேநேரம் கைது செய்யப்பட்ட கோபிநாத்தை போலீசார் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி போலீசார் வரும் 18ம் தேதி வரை சிறையில் அடைத்தனர்.
மேலும், தனிப்படை போலீசார் கோபிநாத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பெங்களூருவில் உள்ள ஒரு காம்பளக்ஸ் கடை உரிமையாளரான முரளி மனோகர் (32) என்பவரிடம் இருந்து அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர், ஏற்கனவே பணி செய்த வேறு ஒரு நிறுவனத்தில் திருடிய 34 ஹார்ட் டிஸ்க்குகள், 20 ரேம் பாகங்கள் கைப்பற்றப்பட்டன.
